இஸ்லாமியர்கள் மீது தொடர்ந்து வெறுப்பைப் பரப்பும் மோடி: மனித உரிமைகள் கண்காணிப்பகம்!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி 100-க்கும் மேற்பட்ட முறை இஸ்லாமியர்கள் மீது வெறுப்புப் பிரசாரங்களைப் பரப்பியதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
’வெறுப்புப் பேச்சைத் தூண்டிய மோடியின் தேர்தல் பிரசாரம்’ என்ற பெயரில் மனித உரிமைகளுக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், தேர்தல் பிரசாரத்தில் மோடி தொடர்ச்சியாக இஸ்லாமியர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீது வெறுப்புப் பிரசாரம் செய்து வந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், மூன்றாவது முறை ஆட்சியை பிடிப்பதற்காக பாரதிய ஜனதா கட்சி ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு எதிராக ஒடுக்குமுறை மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டதாகவும் விமர்சித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த மார்ச் 16 -க்குப் பிறகு மோடி பேசிய 173 தேர்தல் உரைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில், குறைந்தது 110 உரைகளில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்த மோடி, தனது அரசியல் எதிரிகளை அவமதிக்கையில் அவர்கள் இஸ்லாமியர்களின் உரிமைகளுக்கு மட்டுமே ஆதரவாக இருப்பதாகக் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
இதுபோன்ற தவறான தகவல்கள் மூலம் பெரும்பான்மை இந்து சமூகத்தினரிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் மோடி பேசியதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய இயக்குநர் எலைன் பியர்சன் கூறுகையில், “இந்தியப் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள், தங்களது தேர்தல் பிரசாரத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர்களுக்கு எதிராக பல பொய்யான குற்றாச்சாட்டுகளைப் பரப்பினர்.
மோடியின் நிர்வாகத்தின் கீழ் கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மை மக்கள் மீதான பாகுபாடு மற்றும் தாக்குதல்கள் மிகவும் இயல்பானதாக ஆக்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.
வெறுப்புப் பிரசாரம்:
ராஜஸ்தான் பனஸ்வராவில் மோடி பேசிய உரை குறிப்பிடத்தக்கது. அதில், இஸ்லாமியர்களை ஊடுருவியவர்கள் எனக் குறிப்பிட்ட மோடி, எதிர்க் கட்சிகளைத் தாக்க தவறான தகவல்களைக் கூறி இந்து வாக்காளர்களிடையே அச்சத்தைக் கிளப்புமாறு பேசினார்.
மேலும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றிப் பேசியபோது, பெண்கள் வைத்திருக்கும் தங்கம் குறித்த தகவல்களைச் சேகரித்து, அதனை 'ஊடுருவியவர்கள்' மற்றும் 'அதிக குழந்தைகள் பெற்றவர்களுக்கு' காங்கிரஸ் பங்கிட்டுக் கொடுக்க இருப்பதாக இஸ்லாமியர்களைக் குறிப்பிடும்படி மோடி பேசினார்.
அதேபோல, ஏப்ரல் 30 அன்று, பாஜக இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்ட காணொளியில் இஸ்லாமியர்களை படையெடுப்பாளர்கள், பயங்கரவாதிகள், கொள்ளையர்கள் மற்றும் திருடர்கள் என குறிப்பிட்டு அவர்களுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பதாகவும், இஸ்லாமியர் அல்லாதவர்களின் சொத்துகளை அவர்களுக்கு பங்கிட்டுக் கொடுத்துவிடும் என்றும் தவறாகப் பரப்பினர். அந்தக் காணொளி பல லட்சம் பேர் பார்த்த பிறகு நீக்கப்பட்டது.
கடந்த மே 17 அன்று, உத்திரப் பிரதேசத்தின் பாரபங்கியில் பேசிய மோடி, எதிர்க்கட்சியினர் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடித்துவிடுவார்கள் என வெறுப்பைப் பரப்பும் விதமாகப் பேசினார்.
மத்தியப் பிரதேசத்தின் தார் பகுதியில் மே 7 அன்று பேசியபோது, காங்கிரஸ் விளையாட்டில் கூட இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை அளிக்க நினைப்பதாகவும், இந்திய கிரிக்கெட் அணியை மத அடைப்படையில் நிர்ணயம் செய்யவுள்ளதாகவும் பிரதமர் மோடி பொய்த் தகவல்களைப் பரப்பினார்.
பிரதமர் மோடி மட்டுமின்றி உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அஸ்ஸாம் முதல்வர் ஹிமாந்த விஸ்வ சர்மா, மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் ஆகியோர் இஸ்லாமியர்கள் மீது வெறுப்புப் பிரசாரங்களைப் பரப்பி இந்து மக்களிடம் வெறுப்புணர்வையும், பாதுகாப்பின்மையையும் தூண்டினர் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோடி அரசின் நடவடிக்கைகள் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை மீறியுள்ளது என தெரிவித்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஒரு அரசாங்கம் மதம் மற்றும் பிற சிறுபான்மையினரைக் காக்கவும், அவர்களுக்கு எதிரான பாகுபாடு, வன்முறைக்குக் காரணமானவர்களை முழுமையாகவும் நியாயமாகவும் விசாரிக்கக் கடமைப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளது.
”இந்திய அரசின் பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகத்தின் தாய் எனப்படும் கூற்றுகள் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளால் வெற்று வாதங்களாகவே இருக்கின்றன. புதிய மோடி அரசு அதன் பாகுபாடானக் கொள்கைகளை மாற்றி, சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைக்குத் தகுந்த நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்” என்றும் பியர்ஸன் கூறினார்.
இதற்கிடையில், இஸ்லாமியர்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினருக்கு எதிராக இந்துக்களின் கும்பல் தாக்குதல்கள் தொடர்ந்து வருவதாகவும், தேர்தலுக்குப் பிறகு இஸ்லாமியர்களைக் குறிவைத்து அரசு அதிகாரிகள் தாக்குதல் நடத்தி வருவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 15 அன்று மத்தியப் பிரதேசத்தின் மாண்ட்லா மாவட்டத்தில் மாட்டிறைச்சி, விலங்குகளின் தோல்கள் மற்றும் கால்நடைகளின் இறைச்சியை குளிர்சாதன பெட்டிகளில் வைத்திருந்ததால் இஸ்லாமியர்களின் வீடுகள் இடிக்கப்பட்டதை இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
மேலும், ஜூன் 7 அன்று சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் கால்நடைகளைக் கவர்ந்து சென்றதாக சந்தேகத்தின் பேரில் மூன்று இஸ்லாமிய ஆண்களை ஒரு கும்பல் அடித்துக் கொன்றதும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கூடுதலாக, இந்த அறிக்கையில் கடந்த 2014-ல் பாஜக ஆட்சியில் அமர்ந்த பிறகு இஸ்லாமியர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்டத் தாக்குதல்களை அடிக்கோடிட்டுக் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.