
கொல்கத்தா பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில், இழப்பீட்டுத் தொகை பெற மருத்துவரின் தந்தை மறுத்துவிட்டார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த பயிற்சி பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மாநில அரசு அறிவித்த இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ள மருத்துவரின் தந்தை மறுத்துவிட்டார்.
இந்த இழப்பீட்டுத் தொகையை தான் பெற்றுக்கொண்டால், அது எனது மகளுக்கு வலியை ஏற்படுத்தும் என்று கூறி, இழப்பீட்டுத் தொகை பெற்றுக் கொள்ள முடியாது என்றும், தனக்கு இழப்பீடு தேவையில்லை, நியாயம்தான் தேவை என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.
கொல்கத்தாவில் இயங்கி வந்த ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்த பெண் மருத்துவர், கடந்த வாரம் வியாழக்கிழமை இரவுப் பணிக்கு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
விசாரணையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு தனது நன்றியை தெரிவித்திருக்கும், பெண் மருத்துவரின் தந்தை, எங்களுடன் துணை நிற்கும் அனைவரையும் எனது மகன் மற்றும் மகளாகத்தான் பார்க்கிறேன். எனக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டை நிராகரித்துவிட்டேன், அது எனது மகளின் மரணத்துக்காக, இழப்பீட்டுத் தொகையை நான் பெற்றுக்கொண்டால், அது எனது மகளுக்கு மன வலியை ஏற்படுத்தும். எனக்கு நியாயம்தான் வேண்டும் என்று ஏஎன்ஐ செய்திநிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சிபிஐ அதிகாரிகள், ஒட்டுமொத்த குடும்பத்தினரின் வாக்குமூலத்தையும் பெற்றுக் கொண்டனர் என்றும், குற்றவாளியை விரைவாகக் கண்டுபிடித்து கைது செய்வோம் என்று அதிகாரிகள் உறுதி அளித்திருப்பதாகவும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.