
போராட்டத்தின் எதிரொலியாக, மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்த விதிமுறைகளை வகுக்க ஒரு குழுவை அமைப்பதாக மத்திய சுகாதாரத்துறை உறுதி அளித்துள்ளது.
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு எதிராக மருத்துவர்கள், செவிலியர்கள் கடந்த சில தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஒருநாள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் நாடு முழுவதுமே அனைத்து மருத்துவமனைகளிலும் புறநோயாளிகள் இன்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மருத்துவர் சங்க கூட்டமைப்பு, இந்திய மருத்துவ சங்கம், தில்லி அரசு மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தியதன்படி, மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்த ஒரு குழுவை அமைப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.
சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த குழு பரிந்துரைக்கும் என்றும் மாநில அரசுகள் தங்கள் பரிந்துரைகளை குழுவுக்கு அளிக்கலாம் என்றும் கூறியுள்ளது.
தற்போது அதிகரித்து வரும் டெங்கு, மலேரியாவை கருத்தில் கொண்டு மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.