அகதிகளுக்கு குடியுரிமை மறுத்த காங்கிரஸ் அரசுகள்: அமித் ஷா விமர்சனம்

ஒருதரப்பினரை திருப்திப்படுத்தும் கொள்கையால், நம் நாட்டில் ஏராளமான அகதிகளுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
குஜராத் மாநிலம், அகமதாபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ் பெண் ஒருவருக்கு குடியுரிமை சான்றிதழை வழங்கிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
குஜராத் மாநிலம், அகமதாபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ் பெண் ஒருவருக்கு குடியுரிமை சான்றிதழை வழங்கிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
Published on
Updated on
1 min read

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசுகளின் ஒருதரப்பினரை திருப்திப்படுத்தும் கொள்கையால், நம் நாட்டில் ஏராளமான அகதிகளுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

குஜராத் மாநிலம் அகமதாபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 188 ஹிந்து அகதிகளுக்கு குடியுரிமை சான்றிதழ்களை அமித் ஷா வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தலைமை தாங்கிய அரசுகளின் திருப்திப்படுத்தும் அரசியல் கொள்கை காரணமாக கடந்த 1947 முதல் 2014 வரை நம் நாட்டுக்கு அடைக்கலம் கோரி வந்த ஏராளமான அகதிகளுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது.

ஹிந்துக்களாகவும், சமணர்களாகவும், புத்த மதத்தினராகவும், சீக்கியர்களாகவும் இருந்ததற்காக அகதிகள் நமது அண்டை நாடுகளில் மட்டுமின்றி நம் நாட்டிலும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர். மூன்று தலைமுறைகளாக லட்சக்கணக்கானோர் நீதிக்காக ஏங்கினர்.

நம் நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி வந்த கோடிக்கணக்கானோரை முந்தைய அரசுகள் அனுமதித்தன. அவர்களை குடிமக்களாகவும் அங்கீகரித்தன. ஆனால் சட்டத்தைப் பின்பற்றி குடியுரிமை கோரியவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது. அவர்களுக்கு குடியுரிமை வழங்க சட்டத்தில் இடமில்லை என்று கூறப்பட்டது.

பொதுமக்களுக்காகத்தான சட்டமே தவிர சட்டத்துக்காக பொதுமக்கள் அல்ல. ஆட்சிக்கு வந்தவுடன் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று பாஜக கடந்த 2014-இல் வாக்குறுதி அளித்தது. அதன்படி 2019-இல் இச்சட்டத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தோம். இதன் மூலம் கோடிக்கணக்கான ஹிந்துக்கள், சமணர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள் ஆகியோருக்கு நீதி வழங்கப்பட்டது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதும் , இது முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கும் என்றும் அவர்கள் குடியுரிமையை இழப்பார்கள் என்றும் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர். யாருடைய குடியுரிமையையும் பறிக்க இந்தச் சட்டத்தில் ஷரத்து ஏதும் இல்லை என்பதை முஸ்லிம் சமூகத்தினருக்கு இன்று மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனினும் சில மாநில அரசுகள் இந்தச் சட்டம் தொடர்பாக இன்றளவும் மக்களைத் தவறாக வழிநடத்துகின்றன என்று அமித் ஷா தெரிவித்தார்.

’மரங்களை நடுவோம்': குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் ரூ. 1,003 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளை அமித் ஷா தொடங்கி வைத்தார். இது தொடர்பான நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் 'சுற்றுச்சூழலைக் காக்க மரங்களை நடுங்கள். சுற்றுச்சூழலையும் ஓசோன் மண்டலத்தையும் காப்பதில் மரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அடுத்த தலைமுறைக்காக 30 லட்சம் மரங்களை 100 தினங்களில் நடுவதற்கு அகமதாபாத் நகராட்சி நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது. இந்தத் திட்டத்தில் நானும் தொடர்புகொண்டுள்ளேன் ' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com