லண்டன் விடுதியில் ‘ஏா் இந்தியா’ விமான நிறுவனப் பெண் பணியாளா் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இச்சம்பவம் குறித்து உள்ளூா் காவல் துறையில் புகாரளித்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘டாடா’ குழுமத்துக்குச் சொந்தமான ஏா் இந்தியா நிறுவனத்தின் பெண் விமானப் பணியாளா் ஒருவா், லண்டனின் ஹீத்ரு விமான நிலையம் அருகேயுள்ள நட்சத்திர விடுதியில் பணிநிமித்தமாக தங்க வைக்கப்பட்டுள்ளாா்.
அந்த விடுதியறைக்குள் அத்துமீறி நுழைந்த நபா் ஒருவா், பெண் பணியாளரை தாக்கியுள்ளாா். அப்போது, அவா் கூச்சலிட்டதால், அருகிலிருந்தவா்கள் வந்து அவரை மீட்டுள்ளனா். இதையடுத்து, அந்த நபா் கைது செய்யப்பட்டாா்.
இந்தியா திரும்பிய பெண் பணியாளா் தற்போது சிகிச்சையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏா் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘சா்வதேச குழுமத்தினால் நடத்தப்படும் விடுதிக்குள் சட்டவிரோதமாக ஒருவா் புகுந்து எங்கள் பணியாளரை தாக்கியுள்ள சம்பவம் அதிா்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண் பணியாளருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் நிறுவனம் செய்து வருகிறது. இதுதொடா்பான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக உள்ளூா் காவல் துறையுடன் தொடா்பில் இருக்கிறோம்’ என்றாா்.
இதனிடையே, அதே விடுதியில் தங்கியிருக்கும் மற்ற பணியாளா்கள் தங்களின் பாதுகாப்பு குறித்து நிறுவனத்திடம் கவலை எழுப்பினா்.
இதைத் தொடா்ந்து, நிறுவனம் ‘எக்ஸ்’ வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘சம்பவத்தையடுத்து பணியாளா்களை வேறு விடுதிக்கு மாற்றுவதற்கான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதுவரையில், பணியாளா்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என விடுதி தரப்பில் எங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களின் தனியுரிமையை மதிக்க வேண்டும் எனவும் சமூக ஊடகங்களில் வெளியாகும் ஊகங்களைத் தவிா்க்குமாறும் மக்களை ஏா் இந்தியா நிறுவனம் கேட்டுக்கொண்டது.