தான் எந்தத் தவறும் செய்யவில்லை, மத்திய பாஜக அரசு சதி வேலையில் ஈடுபடுகிறது என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் நிலம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார்.
சித்தராமையாவின் மனைவி பார்வதியின் பெயரில் மைசூருவில் உள்ள 3 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் கையகப்படுத்தியுள்ளது. பதிலாக அவருக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரில், தலைமைச் செயலாளர், அதிகாரிகளிடம் அறிக்கை பெற்ற ஆளுநர், சித்தராமையாவுக்கும் இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தொடர்ந்து, சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆளுநரின் இந்த ஒப்புதலுக்கு எதிராக கர்நாடக காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அதேநேரத்தில் சித்தராமையா பதவி விலக வேண்டும் என பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆளுநரின் ஒப்புதலுக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா மனு அளித்துள்ளார். அந்த வழக்கின் விசாரணை இன்று பிற்பகல் நடக்கிறது.
முன்னதாக செய்தியாளர்களுடன் பேசிய சித்தராமையா, 'நான் எந்த தவறும் செய்யவில்லை, என் மீது வழக்குத் தொடர தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
பிரபல வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி இந்த வழக்கில் வாதாடுகிறார். என் மனசாட்சி தெளிவாக உள்ளது. 40 ஆண்டுகள் அமைச்சராக இருந்த எனது அரசியல் வாழ்க்கையில் ஒரு கரும்புள்ளி கூட இல்லை. என் மீது எந்தத் தவறும் இல்லை என கர்நாடக மக்களுக்குத் தெரியும்.
ராஜ்பவனைப் பயன்படுத்தி தனக்கு எதிராக பாஜக, ஜேடிஎஸ், இணைந்து சதி செய்கிறது. என் மீது அவதூறு பரப்புவதற்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். தீய நோக்கத்துடன் பாஜக போராட்டம் நடத்துகிறது. இதை அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம். சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நடவடிக்கை எடுப்போம்.
பாஜக என்னுடைய அரசியல் வாழ்க்கையை முடித்துவிடலாம் என்று நினைக்கிறது. நாங்கள் கூறிய திட்டங்களை செயல்படுத்துவது அவர்களை தொந்தரவு செய்கிறது. நான் ஏழைகளுக்கு ஆதரவாக இருப்பதுதான் எதிர்க்கட்சிகளின் பயத்திற்கு காரணம்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.