தந்தை ராஜீவின் கனவை நிறைவேற்றுவேன்: ராகுல் காந்தி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80ஆவது பிறந்த தினத்தையொட்டி, தில்லியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அவருடைய மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, "தந்தையின் கனவை நிறைவேற்றுவேன்' என்று கூறினார்.
தில்லியில் தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
தில்லியில் தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
Published on
Updated on
1 min read

புது தில்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80ஆவது பிறந்த தினத்தையொட்டி, தில்லியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்திய அவருடைய மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, "தந்தையின் கனவை நிறைவேற்றுவேன்' என்று கூறினார்.

தில்லி வீர் பூமி பகுதியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

ராஜீவ் இரக்கமுள்ள ஆளுமையும், நல்லிணக்கம் மற்றும் நல்லெண்ணத்தின் சின்னமும் ஆவார். அப்பா அவர்களே, உங்கள் போதனைகள் எனக்கு உந்துசக்தியாக உள்ளன. இந்தியாவுக்கான உங்களது கனவுகள் எனது கனவுகளுமாகும். உங்கள் நினைவுகளைச் சுமந்தபடி அந்தக் கனவுகளை நான் நிறைவேற்றுவேன் என்று ராகுல் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தியின் மகளும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி, எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் "எங்கள் தந்தையின் வாழ்க்கை அன்பின் பாடத்தைக் கற்றுக் கொடுத்தது; மற்றவர்களின் துன்பங்களைப் பகிர்ந்து கொள்வதன் முக்கியத்துவத்தை விவரித்தது; அவரது கனவு இளைஞர் சக்தியைக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு வழிகாட்டியது. தொழில்நுட்பம், அறிவியல், தகவல் உள்ளிட்ட துறைகளில் புரட்சிகரமான நடவடிக்கைகளை அவர் எடுத்தார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள பதிவில் "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இந்தியாவின் மகத்தான புதல்வர். கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு அவர் நம்பிக்கையை ஏற்படுத்தினார். தனது அளப்பரிய பங்களிப்பின் மூலம் இந்தியாவை அவர் 21ஆம் நூற்றாண்டுக்கு கொண்டுவந்தார்.

வாக்களிக்கும் வயதை 18ஆகக் குறைத்தது, பஞ்சாயத்துராஜ் அமைப்பை வலுப்படுத்தியது, தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு புரட்சி, பல்வேறு துறைகளையும் கணினிமயமாக்கும் திட்டம், அமைதி ஒப்பந்தங்கள், பெண்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட அவரது நடவடிக்கைகள் நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தன. அவரது பிறந்த நாளையொட்டி நல்லிணக்க நாளை நாடு கொண்டாடுகிறது' என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இளம் வயது பிரதமரான ராஜீவ் காந்தி கடந்த 1984 முதல் 1989ஆம் ஆண்டு வரை பிரதமர் பதவியை வகித்தார். அவர் விடுதலைப்புலிகளால் கடந்த 1991இல் படுகொலை செய்யப்பட்டார்.

தில்லியில் தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com