
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி அவரை நினைவு கூர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-ஆவது பிறந்தநாள் இன்று(ஆக. 20) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் ராஜீவ் காந்திக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
புதுதில்லியின் வீர் பூமி பகுதியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல அரசியல் தலைவர்களும் ராஜீவ் காந்தியை நினைவு கூர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாடாளுமன்றத்திலும் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் வேணுகோபால், காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள ராஜீவ் காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கார்கே தனது எக்ஸ் பக்கத்தில், 'இந்தியாவின் பச்சாதாபம், நல்லிணக்கம், அறிவுசார் சுதந்திரம், தொழில்நுட்ப கண்டுபிடிப்பு, இளைஞர்களை மேம்படுத்துதல் என ராஜீவ் காந்தியின் வாழ்க்கைப் பணியை புத்துயிர் பெறச் செய்ய வேண்டும் .
கிராமங்களில் செழிப்புடன் சமத்துவத்தை ஏற்படுத்தி, இணக்கமான, முற்போக்கான தேசத்திற்கான அவரது தொலைநோக்கு பார்வைக்கு மதிப்பளிக்கும் வகையில் சமநிலையான அணுகுமுறையுடன் இது எட்டப்படும்' என்று பதிவிட்டுள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், 'முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, நமது நாட்டிற்கு ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பை நினைவுகூர்வோம்.
நவீன, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட இந்தியாவுக்கான அவரது தொலைநோக்கு மற்றும் தனித்துவமான முயற்சிகள் நமது முன்னேற்றத்திற்கு தொடர்ந்து வழிகாட்டுகின்றன' என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.