
நாட்டில் 151 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் அதிகபட்சமாக 54 பேர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் இதுவரை 151 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான வழக்குகள் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது. தேர்தலில் அவர்களின் (எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்) பிரமாணப் பத்திரத்தில் இருந்த தரவுகளின் அடிப்படையில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
2019 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என 4,693 பேரின் பிரமாணப் பத்திர தரவுகளைத் தேர்தல் ஆணையத்திடமிருந்து பெற்று ஆய்வு செய்ததில் இவை தெரியவந்துள்ளன.
அந்த ஆய்வின்படி பெண்களுக்கு எதிரான வழக்குகளில் 151 பேர் உள்ளதாகவும், இதில் 16 பேர் தற்போது பதவியில் உள்ள எம்.பி.க்கள், 135 பேர் தற்போது பதவியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் எனத் தெரிவித்துள்ளது.
இவற்றில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் 54 பேர் என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. பாஜகவுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சியில் 23 பேர் மீதும், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 17 பேர் மீதும் பெண்களுக்கு எதிரான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளைக் கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்களில் மாநிலங்கள் வாரியாக பிரிக்கும்போது மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தைச் சேர்ந்த 25 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான வழக்குகள் உள்ளன. ஒடிசாவில் 17 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான வழக்குகள் உள்ளன.
151 பேரில் 16 பேர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு உள்ளது. இதில் இருவர் தற்போது எம்.பி.யாகவும், 14 பேர் எம்.எல்.ஏ.வாகவும் உள்ளனர்.
குற்ற வழக்குகள் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், நிலுவையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை முடிந்தவரையில் விரைவில் விசாரித்து தீர்ப்புகளை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்களை ஏன் முன்னிறுத்துகின்றன என்பதை அரசியல் கட்சிகள் பகிரங்கமாக நியாயப்படுத்த வேண்டும் என 2020ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.