
மேற்கு வங்கத்தில் பாஜகவின் முழு அடைப்புப் போராட்டம் தோல்வி அடைந்ததாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி இன்று (ஆக. 28) குற்றம் சாட்டியது.
காலை முதல் மாலை வரை நடைபெற்ற போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு தரவில்லை எனவும் குறிப்பிட்டது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தைக் கண்டித்து மாணவர்கள், மருத்துவர்கள், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் நேற்று (ஆக. 27) அவர்கள் மீது தடியடி நடத்தி, புகைக்குண்டுகளை வீசி காவல் துறையினர் கலைத்தனர்.
இச்சம்பவத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்தன. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் அரசு மக்களைக் காக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நின்று நீதி பெற்றுத்தரவும் தோற்றுவிட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின.
மேலும் திரிணமூல் ஆட்சியைக் கண்டித்து முழு அடைப்புப் போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்தது. அதன்படி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புப் போராட்டம் நடைபெறறது.
இந்தப் போராட்டத்தின்போது ரயில்வே, மெட்ரோ, பேருந்து சேவை, ஆட்டோ, டாக்ஸி சேவைகள் வழக்கம்போல இயங்கின. அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல செயல்பட்டன. எனினும், கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களால் போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
மேலும், அனைத்து அரசு அலுவலகங்களும் வழக்கம்போல இயங்கும் என்றும், அலுவலகத்திற்கு வராதவர்கள் அதற்கு உரிய காரணத்தை விளக்க வேண்டும் எனவும் மாநில அரசு அறிவுறுத்தியிருந்தது.
இதனிடையே பாஜகவின் முழு அடைப்புப் போராட்டம் மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது. ஒருசில இடங்களில் பாஜக பிரமுகர்களின் வாகனங்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின.
பாஜக தலைவர் ப்ரியங்கு பாண்டேவின் கார் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது. லிகுரியில் பாஜக எம்பி ஜெயந்த குமார் ராயின் வாகனத்தை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
இந்நிலையில் பாஜகவின் முழு அடைப்புப் போராட்டம் தோல்வியடைந்தது என திரிணமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 12 மணிநேரம் நடைபெற்ற போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.