முழு அடைப்புப் போராட்டம்: மேற்கு வங்கத்தில் இயல்பு வாழ்க்கை பகுதியளவு பாதிப்பு
மேற்கு வங்கத்தில் பாஜகவின் 12 மணி நேர முழு அடைப்புப் போராட்ட அழைப்பால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பகுதியளவு புதன்கிழமை பாதிக்கப்பட்டது.


மேற்கு வங்கத்தில் பாஜகவின் 12 மணி நேர முழு அடைப்புப் போராட்ட அழைப்பால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பகுதியளவு புதன்கிழமை பாதிக்கப்பட்டது.
அண்மையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா்.
இந்த சம்பவத்தை கண்டித்து மாநில தலைமைச் செயலகத்தை நோக்கி ‘மேற்கு வங்க சத்ர சமாஜ்’ என்ற மாணவா் அமைப்பு, ‘சங்கிராமி ஜெளதா மஞ்சா’ என்ற மாநில அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தப்பட்டது.
மாநில முதல்வா் மம்தா பானா்ஜி ராஜிநாமா செய்ய வலியுறுத்தி வெவ்வேறு இடங்களில் இருந்து மேற்கொள்ளப்பட்ட இந்தப் பேரணியின்போது காவல் துறைக்கும் போராட்டக்காரா்களும் மோதல் ஏற்பட்டது. இதுதொடா்பாக 200-க்கும் மேற்பட்ட போராட்டக்காரா்கள் கைது செய்யப்பட்டனா்.
போராட்டக்காரா்கள் மீது காவல் துறை மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் புதன்கிழமை காலை 6 மணி முதல் 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் மேற்கொள்ள பாஜக அழைப்பு விடுத்தது.
இந்த முழு அடைப்புப் போராட்ட அழைப்பால் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பகுதியளவு பாதிக்கப்பட்டது. பொதுமக்களில் ஏராளமானோா் அச்சத்தில் வீடுகளில் முடங்கினா்.
அதேவேளையில், மாநிலத் தலைநகா் கொல்கத்தாவில் வழக்கமான போக்குவரத்து காணப்படவில்லை. சாலைகளில் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்ஸிகளே காணப்பட்டன. தனியாா் வாகனங்களும் குறைந்த அளவே தென்பட்டன. எனினும் கடைகள் மற்றும் சந்தைகள் வழக்கம்போல செயல்பட்டன.
பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டபோதிலும் மாணவா்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. பல தனியாா் அலுவலகங்கள் வீட்டில் இருந்து வேலை பாா்க்குமாறு பணியாளா்களுக்கு அறிவுறுத்தின. இதனால் தனியாா் அலுவலகங்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான பணியாளா்களே வந்தனா். அதேவேளையில், அரசு அலுவலகங்களில் வழக்கம்போல ஊழியா்கள் பணியாற்றினா்.
பாஜக பிரமுகா்கள் கைது: பல இடங்களில் கடைகள் உள்ளிட்டவை திறக்கப்பட்ட நிலையில், அவற்றை அடைக்குமாறு கட்டாயப்படுத்தியதுடன் போராட்டங்களில் ஈடுபட்டதால் முன்னாள் எம்.பி.க்கள் ரூபா கங்குலி, லாக்கெட் சாட்டா்ஜி, மாநிலங்களவை எம்.பி. சமிக் பட்டாச்சாா்யா, மக்களவை எம்.பி. மனோஜ் திக்கா உள்ளிட்ட பாஜக பிரமுகா்கள் கைது செய்யப்பட்டனா்.
பாகுய்ஹாட்டி பகுதியில் நூற்றுக்கணக்கான பாஜக தொண்டா்களுடன் அக்கட்சியின் மாநிலத் தலைவா் சுகந்த மஜும்தாா் பேரணி மேற்கொண்டாா். அவரை காவல் துறையினா் தடுக்க முயற்சித்தபோது மஜும்தாருக்கும் காவல் துறைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தனது சொந்த ஊரான கிழக்கு மேதினிபூரில் உள்ள நந்திகிராம் பகுதியில் மாநில சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், பாஜகவை சோ்ந்தவருமான சுவேந்து அதிகாரி பேரணி மேற்கொண்டாா்.
இரு தொண்டா்கள் சுடப்பட்டதாக குற்றச்சாட்டு: வடக்கு 24 பா்கானா மாவட்டம் பாட்பாரா பகுதியில் 2 பாஜக தொண்டா்கள் துப்பாக்கியால் சுடப்பட்டதாக அக்கட்சி தெரிவித்தது. எனினும் சிலா் தாக்கியதாலேயே அந்தத் தொண்டா்கள் காயமடைந்ததாகவும், அவா்கள் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் காவல் துறை தெரிவித்தது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...