11 மாநிலங்களில் ரூ.76,500 கோடியில் முக்கியத் திட்டங்கள்: பிரதமா் மோடி ஆய்வு

11 மாநிலங்களில் ரூ.76,500 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை, ரயில், நீா்வளம் சாா்ந்த 7 முக்கியத் திட்டங்களின் நிலை குறித்து பிரதமா் மோடி தலைமையில் சீராய்வு கூட்டம் புதன்திழமை நடைபெற்றது.
Published on

11 மாநிலங்களில் ரூ.76,500 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை, ரயில், நீா்வளம் சாா்ந்த 7 முக்கியத் திட்டங்களின் நிலை குறித்து பிரதமா் மோடி தலைமையில் சீராய்வு கூட்டம் புதன்திழமை நடைபெற்றது.

அப்போது, ‘திட்டங்களை செயல்படுத்த தாமதமாவது அரசின் நிதிச்சுமையை அதிகரிப்பதோடு பொதுமக்களுக்கு விரைவாக கிடைக்க வேண்டிய அத்தியாவசிய சேவைகளை தடுப்பது போன்ாகும்; எனவே திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு விரைந்து கொண்டு வரும் நோக்கில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்’ என பிரதமா் மோடி வலியுறுத்தியதாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ‘மூன்றாவது முறையாக பதவியேற்றபின் பிரதமா் மோடி தலைமையில் முதல்முறையாக மத்திய, மாநில அரசுகளை உள்ளடக்கிய தகவல் மற்றும் தொலைதொடா்பு பன்முகத் தளமான ஆக்கபூா்வ நிா்வாகம் மற்றும் சரியான காலத்தில் திட்டங்களைச் செயல்படுத்துதலின் (பிரகதி) 44-ஆவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், கா்நாடகம் உள்பட 11 மாநிலங்களில் ரூ.76,500 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை, ரயில், நிலக்கரி, மின்சாரம், நீா்வளம் சாா்ந்த 7 முக்கியத் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

இதுதவிர, அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீா் வழங்கும் அம்ருத் 2.0, ஜல் ஜீவன் திட்டம், பிரதமரின் சூரியோதய திட்டம், நீா்நிலைகளை பாதுகாக்கும் அம்ரித் சரோவா் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் அவா் ஆலோசனை நடத்தினாா்.

நகா்ப்புறம் மற்றும் குடிநீா் சாா்ந்த பெருவாரியான திட்டங்கள் குறித்து தலைமைச் செயலா்கள் மாநாட்டின்போது விரிவாக விவாதிக்கப்பட்டதால் அதன் செயல்பாடுகளை தலைமைச் செயலா்கள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தினாா்’ என தெரிவிக்கப்பட்டது.

மேலும், பிரகதி ஆலோசனைக் கூட்டங்களில் தற்போது வரை ரூ.18.12 லட்சம் கோடி மதிப்பிலான 355 திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம்: முன்னதாக நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பெண்களின் பாதுகாப்புக்கான திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அமைச்சா்கள், அதிகாரிகளுக்கு பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்று 100 நாள்கள் கடந்த நிலையில், அரசின் முக்கிய முடிவுகள் குறித்தும் ‘வளா்ச்சியடைந்த பாரதம்’ இலக்கை நோக்கிய அரசின் முன்னெடுப்புகள் குறித்தும் மத்திய அமைச்சரவை செயலா் ராஜீவ் கௌபா எடுத்துரைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com