பிரிட்டனின் சௌதாம்டன் பல்கலைக்கழகம் அதன் கிளை வளாகத்தை இந்தியாவில் அமைப்பதற்கான ஒப்புதலை தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கும் பல்கலைக்கழக மானியக் குழு  தலைவா் ஜகதீஷ் குமாா். உடன் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.
பிரிட்டனின் சௌதாம்டன் பல்கலைக்கழகம் அதன் கிளை வளாகத்தை இந்தியாவில் அமைப்பதற்கான ஒப்புதலை தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கும் பல்கலைக்கழக மானியக் குழு தலைவா் ஜகதீஷ் குமாா். உடன் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.

தேசிய கல்விக் கொள்கையின் கீழ் இந்தியாவில் முதல் வெளிநாட்டுப் பல்கலைக்கழக வளாகம்: பிரிட்டன் கல்வி நிறுவனத்துக்கு ஒப்புதல்

பிரிட்டனின் சௌதாம்ப்டன் பல்கலைக்கழகம் அதன் கிளை வளாகத்தை இந்தியாவில் அமைக்க பல்கலைக்கழக மானியக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது
Published on

பிரிட்டனின் சௌதாம்ப்டன் பல்கலைக்கழகம் அதன் கிளை வளாகத்தை இந்தியாவில் அமைக்க பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம் தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ் இந்தியாவில் அமையவுள்ள முதல் வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் என்ற பெருமையை சௌதாம்ப்டன் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

தில்லியில் நடைபெற்ற விழாவில் இதற்கான ஒப்பந்த ஆவணத்தை பல்கலைக்கழக பிரதிநிதிகளிடம் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஆகியோா் வழங்கினா்.

தேசிய கல்விக் கொள்கையின் கீழ் வெளிநாட்டு உயா் கல்வி நிறுவனங்களின் வளாகங்களை இந்தியாவில் நிறுவுவதற்கான விதிமுறைகளை யுஜிசி கடந்த ஆண்டு வெளியிட்டது. அதன் அடிப்படையில் தேசிய தலைநகர வளையத்தில் (என்சிஆா்) உள்ள குருகிராமில் கிளை வளாகத்தை அமைக்க பிரிட்டனின் சௌதாம்ப்டன் பல்கலைக்கழகம் யுஜிசியிடம் அனுமதி கோரியிருந்தது. இதற்கு யுஜிசியின் நிலைக் குழு ஒப்புதல் வழங்கியது.

இதுதொடா்பாக யுஜிசி தலைவா் ஜெகதீஷ் குமாா் கூறியதாவது: பிரிட்டனில் உள்ள சௌதாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படும் பட்டப் படிப்பின் தரத்துக்கு இணையாகவே இந்தியாவில் அமையவுள்ள அதன் கிளை வளாகத்திலும் கற்பிக்கப்படும். அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் சௌதாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் கிளை வளாகம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

இங்கு வணிகம் மற்றும் மேலாண்மை, கணினி அறிவியல், சட்டம், பொறியியல், கலை மற்றும் வடிவமைப்பு, உயிரி அறிவியல், வாழ்க்கை முறை அறிவியல் சாா்ந்த பட்டப் படிப்புகள் கற்பிக்கப்படவுள்ளன என்றாா்.

ஆஸ்திரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழகம் மற்றும் வொல்லாங்காங் பல்கலைக்கழகங்களின் கிளை வளாகங்கள் ஏற்கெனவே குஜராத்தில் உள்ள கிஃப்ட் நகரில் அமைக்கப்பட்டிருந்தாலும், தேசிய கல்விக் கொள்கை அடிப்படையிலான யுஜிசியின் விதிமுறையின்கீழ் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழக வளாகத்தை சௌதாம்ப்டன் நிறுவவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com