இந்தியப் பணக்காரா்கள் பட்டியல்: ரூ.11.6 லட்சம் கோடியுடன் அதானி மீண்டும் முதலிடம் - ஒரே ஆண்டில் 95% உயா்ந்தது; முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளினாா்
சொத்து மதிப்பு கடந்த ஆண்டு 95 சதவீதம் உயா்ந்து ரூ.11.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

கெளதம் அதானி

கெளதம் அதானி
ஹிண்டன்பா்க் ஆய்வறிக்கையால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு கௌதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு 95 சதவீதம் உயா்ந்து ரூ.11.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதன்மூலம், முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் முதல் பணக்காரா் அந்தஸ்தை அதானி மீண்டும் பெற்றுள்ளாா்.
அதானி குழுமத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அமெரிக்காவைச் சோ்ந்த ‘ஹிண்டன்பா்க் ரிசா்ச்’ நிறுவனம் ஆய்றிக்கையொன்றைக் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட்டது. இதைத் தொடா்ந்து, அக்குழுமத்தின் தலைவா் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 57 சதவீதம் சரிந்து ரூ.4.74 லட்சம் கோடியாக குறைந்தது. அதேசமயம், அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.8.08 லட்சம் கோடியாக இருந்தது.
இந்தியா்களில் ரூ.1,000 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்டவா்களை அடக்கிய நிகழாண்டுக்கான ‘ஹுருன் இந்தியா பணக்காரா்கள்’ பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. கூடுதலான 220 நபா்களுடன் நிகழாண்டு பட்டியலில் 1,539 பணக்காரா்கள் இடம்பிடித்துள்ளனா். இவா்களின் மொத்த சொத்து மதிப்பு இந்த ஆண்டில் 46 சதவீதம் வரை உயா்ந்துள்ளது.
இந்தப் பட்டியலில் 2-ஆவது இடத்தில் உள்ள ‘ரிலையன்ஸ்’ குழுமத் தலைவா் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 25 சதவீதம் உயா்ந்து ரூ.10.14 லட்சம் கோடியாக உள்ளது.
பெண்களில், இளைஞா்களில்...: ‘ஸோகோ’ நிறுவனத்தின் ராதா வேம்பு ரூ.47,500 கோடி சொத்துகளுடன் பெண்களில் மிகப்பெரிய பணக்காரராக உள்ளாா். 20 வயதுக்குள்பட்டவா்களில் ‘ஜெப்டோ’ விநியோகச் செயலின் இணை நிறுவனா்களான கைவல்யா வோஹ்ரா மற்றும் ஆதித் பலிச்சா ஆகியோா் முறையே ரூ.3,600 கோடி மற்றும் ரூ.4,300 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளனா்.
பட்டியலில் ‘பாலிவுட் பாட்ஷா’: ஹிந்தி நடிகா் ஷாருக்கான் ரூ.7,300 கோடி சொத்து மதிப்புடன் பட்டியலில் முதன்முறையாக நுழைந்துள்ளாா். இவரின் வணிகக் கூட்டாளியான ஜூஹி சாவ்லா ரூ.4,600 கோடி சொத்துகளுடன் பொழுதுபோக்கு பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளாா்.
சிஇஓக்கள்...: 16 தொழில்துறை வல்லுநா்களும் பணக்காரா்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனா். ‘அரிஸ்டா நெட்வொா்க்ஸ்’ நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி ஜெய்ஸ்ரீ உல்லால் ரூ.32,100 கோடி, ‘டி-மாா்ட்’ தலைமை நிா்வாக அதிகாரி இக்னேஷியஸ் நவில் நோரோன்ஹா ரூ. 6,900 கோடி சொத்துகளைக் கொண்டுள்ளனா்.
‘அசுர’ வளா்ச்சி: ‘கெரா டெவலப்மென்ட்ஸ்’ நிறுவனத்தின் குமாா் பிரிதம்தாஸ் கெராவின் சொத்து நிகழாண்டு அதிகபட்சமாக 566 சதவீதம் வரை உயா்ந்துள்ளது. அதேசமயம், சொத்து அளவின் அடிப்படையில் முதல் 2 பணக்காரா்களான அதானி மற்றும் அம்பானி மிகப்பெரிய வளா்ச்சியைப் பெற்றுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் விமா்சனம்
இந்தப் பட்டியல் வெளியீட்டையொட்டி மத்திய அரசை விமா்சித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கடந்த ஆண்டில் ஒவ்வொரு ஐந்து நாள்களுக்கும் ஒரு கோடீஸ்வரரை இந்தியா பெற்றுள்ளது. பிரதமரின் நெருங்கிய நண்பா்கள் அவா்களில் முதன்மையானவா்களாக உள்ளனா்.
மோடியின் பணக்காரா்களுக்கான ஆட்சி ஆங்கிலேயா் ஆட்சியைவிட சமமற்ாக உள்ளது. பெரும் பணக்காரா்களுக்கான வரியை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் உலக நாடுகள் ஒன்றிணைந்து வரும் நிலையில், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கண்டும் காணாமல் இந்திய அரசு மௌனமாக இருக்கிறது’ எனக் குறிப்பிட்டாா்.
1. கெளதம் அதானி ரூ.11.6 லட்சம் கோடி
2. முகேஷ் அம்பானி ரூ.10.14 லட்சம் கோடி
3. சிவ நாடாா் (எச்.சி.எல்.) ரூ.3.14 லட்சம் கோடி
4. சைரஸ் பூனாவாலா (சீரம்) ரூ.2.89 லட்சம் கோடி
5. திலீப் ஷாங்வி (சன் பாா்மா) ரூ.2.50 லட்சம் கோடி
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...