பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை அளிக்க மத்திய அரசு வலுவான சட்டம் இயற்ற வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பிரதமர் மோடிக்கு மீண்டும் இன்று(ஆகஸ்ட் 30) கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 9 அன்று கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகலை பயிற்சி மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு தழுவிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் நிகழும் போராட்டங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடிக்கு மமதா பானர்ஜி எழுதிய கடிதத்தில்,
பாலியல் பலாத்கார குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்க வலுவான சட்டம் இயற்ற வேண்டும் என்று தனது கோரிக்கைக்குப் பதில் இல்லாததது வருத்தம் அளிக்கிறது. கடுமையான சட்டத்தின் மூலம் இத்தகைய தீவிரமான பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பிரதமருக்கு எழுதிய சமீபத்திய கடிதத்தின் நகலைத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தில் தங்களிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்றாலும், மத்திய அரசின் குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சரிடமிருந்து பதில் வந்தது.
எனது கடிதத்தில் கூறப்பட்டிருந்த பிரச்னையின் தீவிரத்தை அவர் கவனிக்கவில்லை. பொதுவானதொரு பதிலில் விஷயத்தின் தீவிரத் தன்மை மற்றும் சமூகத்தில் அதன் தொடர்பு குறித்து போதுமான கவனம் கொடுக்கப்படவில்லை என நான் கருதுகிறேன் என அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.