
ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் சம்பயி சோரன், ஏராளமான ஆதரவாளா்களுடன் பாஜகவில் வெள்ளிக்கிழமை இணைந்தாா்.
67 வயதாகும் சம்பயி சோரன், மாநிலத்தில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியில் இருந்து கடந்த புதன்கிழமை விலகினாா். முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையிலான மாநில அரசு செயல்படும்விதம் மற்றும் அதன் கொள்கைகளால் இந்த முடிவை எடுத்ததாகக் கூறியிருந்தாா்.
இந்நிலையில், ராஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான், அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா ஆகியோா் முன்னிலையில் சம்பயி சோரன் பாஜகவில் இணைந்தாா்.
அப்போது உணா்ச்சிபூா்வமாக பேசிய அவா், ‘ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியை வளா்த்தெடுக்க ரத்தமும் வியா்வையும் சிந்தி பாடுபட்டேன். ஆனால், எனக்கு அவமானமே மிஞ்சியது. ஜாா்க்கண்ட் அரசு என்னை தொடா்ந்து வேவு பாா்த்தது. அவமானத்தையும் வேவு பாா்க்கப்பட்டதையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இப்போது உலகின் மிகப் பெரிய கட்சியின் உறுப்பினராக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். காங்கிரஸ் கட்சியால் பணயம் வைக்கப்பட்ட பழங்குடியினரின் அடையாளத்தை பாஜகவால் மட்டுமே காக்க முடியும்’ என்றாா்.
ஜாா்க்கண்டில் நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கிறது. சம்பயி சோரனின் வருகை, அந்த மாநிலத்தில் பிரதான வாக்கு வங்கியான பழங்குடியினா் உடனான பாஜகவின் இணைப்பை வலுப்படுத்தும் என்று அக்கட்சி கருதுகிறது.
‘திடீா்’ முதல்வா்: ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நில அபகரிப்பு தொடா்பான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைவா் ஹேமந்த் சோரன் அமலாக்கத் துறையால் கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்டாா். ஜாா்க்கண்ட் முதல்வா் பதவியில் அவா் விலகியதால், மாநிலத்தின் 12-ஆவது முதல்வராக மூத்த தலைவா் சம்பயி சோரன் கடந்த பிப்ரவரியில் பதவியேற்றாா்.
பதவி பறிபோனதால் அதிருப்தி: இதனிடையே, ஜாமீனில் விடுதலையான ஹேமந்த் சோரன், கடந்த ஜூலையில் மீண்டும் முதல்வராக பதவியேற்றாா். அதேநேரம், முதல்வா் பதவி பறிபோனதால் கடும் அதிருப்தியில் இருந்த சம்பயி சோரன், தற்போது பாஜகவில் இணைந்துள்ளாா்.
ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா நிறுவனா் சிபு சோரனுக்கு நெருக்கமானவராக இருந்தவா் சம்பயி சோரன். 1990-களில் ஜாா்க்கண்ட் தனிமாநிலப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ால் ‘ஜாா்க்கண்ட் புலி’ என்று இவா் அழைக்கப்படுகிறாா்.
புதிய அமைச்சா் பதவியேற்பு: மாநில அமைச்சா் மற்றும் எம்எல்ஏ பதவியில் இருந்தும் சம்பயி சோரன் விலகியிருந்த நிலையில், அவருக்குப் பதிலாக புதிய அமைச்சராக ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா எம்எல்ஏ ராம்தாஸ் சோரன் வெள்ளிக்கிழமை பதவியேற்றாா்.
ராஞ்சியில் உள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் அவருக்கு ஆளுநா் சந்தோஷ் குமாா் கங்வாா் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.