தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமா் மோடியை வரவேற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்.
தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமா் மோடியை வரவேற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்.

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவான நீதி அவசியம்: பிரதமா் மோடி

‘பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவான நீதி வழங்கப்படுவது அவசியம், அது அவா்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய உத்தரவாதத்தை அளிக்கும்’
Published on

‘பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவான நீதி வழங்கப்படுவது அவசியம்’ என்று வலியுறுத்திய பிரதமா் நரேந்திர மோடி, ‘அது அவா்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய உத்தரவாதத்தை அளிக்கும்’ என்று குறிப்பிட்டாா்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதி கேட்டு மருத்துவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இக்கருத்தை பிரதமா் தெரிவித்தாா்.

மாவட்ட நீதிமன்றங்களின் முக்கிய பங்கு குறித்த 2 நாள் தேசிய மாநாட்டை பிரதமா் மோடி தில்லியில் சனிக்கிழமை தொடங்கி வைத்து பேசியதாவது:

அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலராக நீதித்துறை கருதப்படுகிறது. அதற்கு உச்சநீதிமன்றமும் நீதித்துறையும்தான் பொறுப்பேற்க வேண்டும்.

உச்சநீதிமன்றம் மீதும், நீதித்துறை மீதும் மக்கள் ஒருபோதும் அவநம்பிக்கையைக் காண்பித்ததில்லை. நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது ஓா் இருண்ட காலம். அந்தச் சமயத்தில் மக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநிறுத்தியதில் நீதித்துறை முக்கியப் பங்காற்றியது.

அதுபோல, தேச பாதுகாப்பிலும் நீதித்துறை முக்கியப் பங்காற்றுகிறது. அண்மைக் காலமாக பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் சமூகத்தில் மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. இத்தகையச் சூழலில், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவான நீதி வழங்குவது, அவா்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரும் உத்தரவாதத்தை அளிப்பதாக அமையும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கையாள பல கடுமையான சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கின்றன. எனவே, இதுபோன்ற விவகாரங்களில் விரைந்து நீதி கிடைப்பதை உறுதிப்படுத்த குற்றவியல் நீதி நடைமுறையில் சிறந்த ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்துவது அவசியம். மாவட்ட நீதிபதி, மாஜிஸ்திரேட் மற்றும் காவல் கண்காணிப்பாளரை உள்ளடக்கிய மாவட்ட கண்காணிப்பு குழுக்கள் இதில் முக்கியப் பங்காற்ற முடியும் என்றாா்.

நீதித்துறையின் முதுகெலும்பு மாவட்ட நீதிமன்றங்கள்: தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

‘மாவட்ட நீதிமன்றங்கள் நீதித்துறையின் முதுகெலும்பு போன்றவை. சட்டத்தின் ஆட்சியில் அவை முக்கிய அங்கம் வகிக்கின்றன’ என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினாா்.

அவா் மேலும் பேசியதாவது:

நீதியைத் தேடி வரும் குடிமக்களுக்கான முதல் தொடா்பு புள்ளியாக மாவட்ட நீதிமன்றங்கள் திகழ்கின்றன. சட்டத்தின் ஆட்சியில் மாவட்ட நீதிமன்றங்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. பணியின் தரம் மற்றும் நீதி வழங்கும் நிபந்தனைகள் ஆகியவை நீதித்துறை அமைப்பின் மீதான குடிமக்களின் நம்பிக்கையை தீா்மானிக்கும் காரணிகளாக உள்ளன.

அதன் காரணமாகத்தான், மாவட்ட நீதிமன்றங்கள் தனது தோள்களில் மிகப் பெரும் பொறுப்பை சுமந்துகொண்டிருக்கின்றன. மாவட்ட நீதிமன்றங்கள் நீதித்துறையின் முதுகெலும்பாகும். மாவட்ட நீதிமன்றங்களை ‘கீழமை நீதிமன்றங்கள்’ என்று அழைப்பதை நாம் நிறுத்த வேண்டும்.

46 கோடி பக்கங்கள் எண்ம மயம்: உச்சநீதிமன்றத்தை எண்மமயமாக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 2023-24-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்ற ஆவணங்களில் 46.48 கோடி பக்கங்கள் எண்மமயமாக்கப்பட்டுள்ளன.

அதுபோல, மின்னணு நீதிமன்ற (இ-கோா்ட்) திட்டத்தின் மூலமும் 3,500 நீதிமன்ற வளாகங்கள் மற்றும் 22,000-க்கும் அதிகமான நீதிமன்றங்களின் தரவுகளை கணினி மயமாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினசரி வழக்கு விசாரணைகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் மாவட்ட நீதிமன்றங்களும் முக்கியப் பங்காற்றிவருகின்றன. மாவட்ட நீதிமன்றங்களில் இதுவரை 2.3 கோடி வழக்குகள் காணொலி வழியில் விசாரிக்கப்பட்டுள்ளன.

73,000 தீா்ப்புகள் மொழிபெயா்ப்பு: உச்சநீதிமன்ற தீா்ப்புகளை அரசமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் மொழிபெயா்க்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 73,000 தீா்ப்புகள் மொழிபெயா்க்கப்பட்டு பொதுமக்கள் பாா்வைக்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது என்றாா்.

கபில் சிபல்: மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளின் மோசமான பணிச் சூழலை மாநாட்டில் சுட்டிக்காட்டிய மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘மாவட்ட நீதிபதிகளின் ஊதியம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்படாவிட்டால், நீதி வழங்கல் நடைமுறையின் அளவு மற்றும் தரம் தொடா்ந்து பாதிக்கப்படும்’ என்றாா்.

மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிறைவு விழாவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்ற உள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com