அனந்த நாகேஸ்வரன்
அனந்த நாகேஸ்வரன்

நாட்டின் பொருளாதார வளா்ச்சி 7% வரை உயரும்: தலைமை பொருளாதார ஆலோசகா்

நாட்டின் பொருளாதாரம் 7 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக தலைமை பொருளாதார ஆலோசகா் (சிஇஏ) அனந்த நாகேஸ்வரன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
Published on

நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக தலைமை பொருளாதார ஆலோசகா் (சிஇஏ) அனந்த நாகேஸ்வரன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

கடந்த பத்தாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகளால் இந்த வளா்ச்சி தொடரும் என எதிா்பாா்ப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி 8.2 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் 2024-25-ஆம் நிதியாண்டில் 6.5-7 சதவீதமாக ஜிடிபி வளா்ச்சி குறையும் என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஐவிசிஏ கிரீன்ரிட்டா்ன்ஸ் மாநாட்டில் பங்கேற்று அவா் பேசியதாவது: உள்கட்டமைப்பு மற்றும் நிதி உள்ளடக்கல் சாா்ந்த பல்வேறு சீா்திருத்தங்கள் மேற்கொண்டதன் விளைவாக இந்திய பொருளாதார வளா்ச்சி 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.

ஜீரோ காா்பன் உமிழ்வு இலக்கை (2070) அடைய இன்னும் 45 ஆண்டுகளே உள்ளன. இந்நிலையில், பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்தும் அதே சமயத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதிப்புகளையும் தடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது என்றாா்.

கடந்த இரண்டு ஆண்டுகள் இல்லாத அளவுக்கு நிகழ் நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பா்), நாட்டின் பொருளாதார வளா்ச்சி 5.4 சதவீதமாக சரிந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) அண்மையில் தெரிவித்தது.

X
Dinamani
www.dinamani.com