

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று: அயோத்தியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!
பாபர் மசூதி இடிப்பு தினத்தின் 32-வது ஆண்டைக் கருத்தில் கொண்டு உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் வெள்ளிக்கிழமை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின், அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி இடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, இன்றைய தினம் நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அயோத்தியின் காவல் கண்காணிப்பாளர் கூறுகையில்,
மத்திய ரிசர்வ் போலீஸ் படை(சிஆர்பிஎஃப்) பிஏசி, ஏடிஎஸ் மற்றும் சிவில் காவலர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களுக்கு எந்தவித அசௌகரியமும் ஏற்படாத வகையில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவரி கூறினார்.
மேலும் அயோத்தியில் பாதுகாப்புக்காக சிஆர்பிஎஃப், பிஏசி, ஏடிஎஸ் மற்றும் சிவில் போலீஸார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு வரும் வாகனங்களும், மக்களும் சோதனை செய்யப்படுகின்றனர்.
ஷாஹி ஜமா மசூதியில் நவம்பர் 24 அன்று கல் வீச்சு சம்பவத்தைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முகலாயர் கால மசூதியில் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையின் சோதனையின்போது கல் வீச்சு சம்பவம் நிகழ்ந்தது, இதன் விளைவாக நான்கு நபர்கள் இறந்தனர். அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் உள்பட பலர் காயமடைந்தனர்.
ராகுலுக்கு அனுமதி மறுப்பு..
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, டிசம்பர் 4 அன்று ராகுல் காந்தி, வயநாடு எம்பி பிரியங்கா காந்தி மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் இறந்தவர்களின் உறவினர்களைச் சந்திக்க சம்பலுக்குச் செல்ல முயன்றனர். ஆனால், அவர்கள் காஜிபூர் எல்லையில் போலீஸார் தடுத்து நிறுத்தியதால், வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் பகுதிக்குச் செல்ல முடியவில்லை. இதனையடுத்து அவர்கள் தில்லி திரும்பினர்.
பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று பல முஸ்லீம் குடியிருப்புகள் சூறையாடப்பட்டன, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலவரம் வெடித்தது, இதன் விளைவாக சுமார் 1,000 பேர் கொல்லப்பட்டனர். அந்த நாள் இன்று கடைப்பிடிக்கப்படுவதையொட்டி அயோத்தி உள்பட நாடு முழுவதும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.