இந்தியாவில் ரேஷன் கார்டு வைத்திருக்காதவர்கள்கூட வாட்ஸ்ஆப் வைத்திருப்பர். ரஜினி ஒரு படத்தில் சொல்லியிருப்பார், ஐ கேன் டாக் இங்கிலீஷ், ஐ கேன் லாஃப் இங்கிலீஷ் என்பது போல, இந்தியர்கள் இதில்தான் பேசுவார்கள், அரட்டையடிப்பார்கள், பெரும்பாலானோர் வாழ்வதே அதில்தான்.
நாட்டில் மொத்தம் 59.6 கோடி இந்தியர்கள் வாட்ஸ்ஆப் செயலியைப் பயன்படுத்துகிறார்கள் என்பது தரவு. இது ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியாம்.
இந்தியர்களைப் பொருத்தவரை வாட்ஸ்ஆப், வெறும் செயலியல்ல. அதற்கும் மேல். பலரால் தற்போது அது இல்லாமல் வாழ்வது பற்றி கனவிலும் எண்ண முடியாது.
எல்லாம் சரிதான். இந்த வாட்ஸ்ஆப்பிலும் வந்துவிட்டது வினை (ஆப்பு). ஒரு வாட்ஸ்ஆப் கணக்கை முடக்கும் மோசடியாளர்கள், அதில் உள்ள தொடர்பு எண்கள் மூலம் அனைவரது கணக்குகளையும் முடக்குவது, தனிநபர் தகவல்களைத் திருடுவது, பண மோசடி என அனைத்தையும் செய்து வருகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.
இதில் பிரபலங்களும் தப்பவில்லை. ஷோபு யர்லகட்டா.. இப்படிச் சொன்னால் பலருக்கும் தெரியாது, ஆனால் 2015 ஆம் ஆண்டு தெலுங்குப் படமான 'பாகுபலி'யின் தயாரிப்பாளர் இவர். மேலும், இவருடன், தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் மற்றும் அவரது உதவியாளர்களில் ஒருவரும் என பட்டியல் நீள்கிறது.
அண்மையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சுப்ரியா சுலேவும் தனது வாட்ஸ்ஆப் முடக்கப்பட்டது குறித்து அறிவித்து எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதாவது எனது வாட்ஸ்ஆப் கணக்கு முடக்கப்பட்டது. எனவே எனது வாட்ஸ்ஆப் கணக்கிலிருந்து வரும் தகவல்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்பதே இவர்கள் அனைவரும் விடுத்த எச்சரிக்கை.
வாட்ஸ்ஆப் கணக்கை முடக்கினால் என்னவாகும்?
கிடைத்திருக்கும் தகவலின்படி, சைபர் குற்றவாளிகள், ஒருவரது வாட்ஸ்ஆப் கணக்கை முடக்க வேண்டுமென்றால், ஒரு புதிய செல்போனில் வாட்ஸ்ஆப் கணக்கை மாற்றுவது போல ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் செல்போன் எண்ணைக் கொடுக்கிறார்கள். அதற்காக வாட்ஸ்ஆப் 6 இலக்கை எண்ணை ஏற்கெனவே பயன்படுத்துபவரின் செல்போனுக்கு அனுப்பும். ஒருவேளை அந்த 6 இலக்கை எண்ணை, உரியவர் மோசடியாளர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் அளித்துவிட்டால், முடிந்தது கதை. அவரது வாட்ஸ்ஆப் கணக்கின் ஒட்டுமொத்த உரிமையும் மோசடியாளர்களின் கைகளுக்குச் சென்றுவிடும்.
இப்படித்தான், சந்தோஷ் சிவன் வாட்ஸ்ஆப் கணக்கை முடக்கிய சைபர் குற்றவாளிகள், அவரது வாட்ஸ்ஆப் கணக்கில் இருந்த அவரது உதவியாளரின் எண்ணை புதிய செல்போனில் பதிவிட்டிருக்கிறார்கள். பிறகு சந்தோஷ் சிவனின் வாட்ஸ்ஆப்பிலிருந்து அவரைத் தொடர்புகொண்டு தெரியாமல் 6 இலக்க கோட்டை அனுப்பிவிட்டதாகவும் அதனை தெரிவிக்குமாறு கேட்டிருக்கிறார்கள். அவர் என்ன செய்வார்? கேட்பது சந்தோஷ் சிவன் என்ற எண்ணி, ஆறு இலக்க எண்ணை அனுப்பியதும் உதவியாளரின் வாட்ஸ்ஆப் கணக்கும் மோசடியாளர்களின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிட்டது.
இந்த சம்பவத்தில், யர்லகட்டா, சந்தோஷ் சிவன், அவரது உதவியாளரின் வாட்ஸ்ஆப் கணக்குகளிலிருந்தும் நண்பர்களின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு இதே போன்ற தகவல்களை அனுப்பியிருப்பார்கள்.
அது மட்டுமல்லாமல், சிவனின் உறவினர் ஒருவர் வாட்ஸ்ஆப் குழுவில் இந்த மோசடி குறித்து பதிவிட்ட தகவலையும் சைபர் குற்றவாளிகள், சந்தோஷ் சிவனின் உதவியாளர் வாட்ஸ்ஆப் கணக்கைப் பயன்படுத்தி டெலீட் செய்திருக்கிறார்கள். அந்த குழுவில் உதவியாளர் ஒரு அட்மின் என்பதால். பிறகு, அந்த வாட்ஸ்ஆப் குழுவையே அட்மின் மட்டும் தகவல் பகிரும் வகையில் மாற்றிவிட்டார்கள். அதாவது அந்தக் குழுவில் இனி சைபர் குற்றவாளிகள் மட்டுமே தகவல் பகிர முடியும்.
இப்படி வாட்ஸ்ஆப் கணக்கை முடக்கி அதிலிருக்கும் எண்களை வாட்ஸ்ஆப் சாட் மூலம் தொடர்புகொண்டு பணம் கேட்டு மோசடி செய்யவும் முடியும்.
இதுவரை இப்படி மோசடி செய்யப்பட்ட வாட்ஸ்ஆப் கணக்குகளின் சரியான எண்ணிக்கை தெரியவரவில்லை என்றாலும், அபாய அளவுக்கு இருக்கலாம் என்பதே கணிப்பு.
அண்மையில், ஒரு முன்னணி நிறுவன தலைமை செயல் அதிகாரியின் பெயரில் வாட்ஸ்ஆப் கணக்கைத் தொடங்கி, நிர்வாகத்தின் குழுக் கூட்டத்தையே செயற்கை நுண்ணறிவின் உதவியோடு நடத்தியிருக்கிறார்கள். ஆனால் மிகப்பெரிய மோசடியை, சைபர் குற்றவாளிகள் செய்ய முயன்று அது இறுதியில் நல்வாய்ப்பாக தோல்வியடைந்தது. ஆனால், அதனை தோல்வி என்று சொல்லாமல், இதனால் இன்னும் என்னென்ன அபாயங்கள் நேரிடலாம் என்பதற்கான உதாரணமாகவே பார்க்க வேண்டும் என்கிறார்கள் சைபர் பிரிவு காவல்துறையினர்.
இதிலிருந்து தப்பிக்க முடியுமா?
நிச்சயம் தப்பிக்க முடியும். ஒன்றே ஒன்றுதான், எப்போதும் எந்த 'ஒரு முறை பகிரும் எண்'ணையும் ஆறு இலக்க எண்களையும் யார் கேட்டாலும், கடவுளே நேரில் வந்து கேட்டாலும்கூட கொடுக்க வேண்டாம்.
எந்தவொரு ஓடிபி எண்ணைப் பகிர்வதற்குப் பின்னாலும் ஒரு மோசடிதான் இருக்கும். இருக்கலாம். இருக்கிறது.
கூடுதல் பாதுகாப்புக்கு வேறு என்னவெல்லாம் செய்யலாம்?
இரண்டு அடுக்கு பாதுகாப்புகளை ஏற்படுத்துவது அவசியம். வாட்ஸ்ஆப் செட்டிங்கில் சென்று அதில் அக்கவுண்ட் - டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன் என்பதை ஆக்டிவ் செய்ய வேண்டும். அவ்வாறு செய்துவிட்டால், வாட்ஸ்ஆப் கணக்கை வேறு செல்போனுக்கு மாற்ற வேண்டும் என்றால், 6 இலக்க எண்ணுடன் உங்கள் செல்போனில் நீங்கள் பயன்படுத்தும் பாஸ்வேர்டும் வேண்டும்.
அடுத்து, மின்னஞ்சல் முகவரி. அதே செட்டிங்கில் சென்று அக்கவுண்ட் ஆப்ஷனில் மின்னஞ்சல் முகவரியை இணைக்கலாம். இதனால் வாட்ஸ்ஆப் முடக்கத்தைத் தடுக்க முடியாது. ஒருவேளை யாராவது முடக்கிவிட்டால் மீட்க முடியும்.
பாஸ்கீ இருந்தால்..
உங்கள் செல்போனில் பாஸ்கீ தொழில்நுட்பம் இருந்தால் வாட்ஸ்ஆப்பை ஓபன் செய்ய பயோமெட்ரிக் ஆதன்டிகேஷன் வைக்கலாம். அதாவது கைரேகை அல்லது முகத்தை அடையாளம் காணும் வசதியை ஏற்படுத்தினால், வாட்ஸ்ஆப்பை முடக்கினாலும் அதனை திறக்க இயலாது.
மோசடி நடந்துவிட்டது... 1930 டயல் செய்தால்..
சைபர் குற்றத்தில் சிக்கினால் உடனடியாக 1930-க்கு அழைக்கலாம். ஆனால், எப்போது இந்த எண்ணை தொடர்புகொண்டாலும் இணைப்புக் கிடைப்பதில்லை என்பதே பரவலான குற்றச்சாட்டு. ஏராளமானோர் இதனை தொடர்பு கொள்வதால் என்கிறார்கள். அவசர நேரத்தில் கிடைக்காத அழைப்பைப் பிறகு மேற்கொண்டு என்ன பயன்?
அதுபோலவே சைபர் குற்றங்களை பதிவு செய்யும் இணையதளங்களும் இருக்கின்றன. ஒரு புகாரைப் பதிவு செய்ய மோசடியாளர்கள் அழைத்த எண் அவசியம். ஆனால், இதுபோன்ற வாட்ஸ்ஆப் மோசடியில், சைபர் குற்றவாளிகள் ஒன்று உங்கள் நண்பர் அல்லது உறவினர் எண்ணில் இருந்தோ அவ்வளவு ஏன் உங்கள் சொந்த செல்போன் எண்ணில் இருந்தோகூட அழைக்கலாம். பிறகு எப்படி அதில் முறையிடுவது?
வாட்ஸ்ஆப் ஆயிரக்கணக்கான உள்ளங்களை ஒன்றிணைக்கிறதுதான். ஆனால் அதனை நீங்கள் பாதுகாப்பாக வைத்திருக்கும் வரைதான். இல்லையென்றால் நூற்றுக்கணக்கானோரை மோசடி வலைக்குள் சிக்கவைத்துவிடும்.
எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பதும், ஓடிபியை பகிர்ந்துதான் ஆக வேண்டுமா? என சிந்திப்பதும்தான் தப்பிக்க ஒரே வழி!