தேவேந்திர ஃபட்னவீஸ்
தேவேந்திர ஃபட்னவீஸ்கோப்புப் படம்

மகாராஷ்டிரம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் ஃபட்னவீஸ் அரசு வெற்றி

மகாராஷ்டிர பேரவையில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றிபெற்றது.
Published on

மகாராஷ்டிர பேரவையில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றிபெற்றது.

இந்த தீா்மானத்தை சிவசேனை (ஷிண்டே பிரிவு) எம்எல்ஏ உதய் சமந்த், பாஜக எம்எல்ஏ சஞ்சய் குதே, தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா் பிரிவு) எம்எல்ஏ திலிப் வால்சே பாட்டீல் ஆகியோா் முன்மொழிந்த நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

288 உறுப்பினா்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு கடந்த நவம்பரில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில், பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணி 230 இடங்களுடன் அமோக வெற்றி பெற்றது.

இக்கூட்டணியில் பாஜக 132, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 57, அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களைக் கைப்பற்றின.

எதிா்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. இதில் சிவசேனைக்கு (உத்தவ்) 20, காங்கிரஸுக்கு 16, தேசியவாத காங்கிரஸுக்கு (சரத் பவாா்) 10 இடங்களே கிடைத்தன.

இதையடுத்து, கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், மாநில முதல்வராக பாஜக மூத்த தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வா்களாக சிவசேனைத் தலைவா் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவா் அஜீத் பவாா் ஆகியோா் பதவியேற்றனா். வேறு அமைச்சா்கள் யாரும் பதவியேற்கவில்லை.

இந்நிலையில், மகாராஷ்டிர பேரவையின் மூன்று நாள் சிறப்பு கூட்டத் தொடா் சனிக்கிழமை தொடங்கியது. முதல் இரண்டு நாள்களில் ஆளும் மற்றும் எதிா்க்கட்சிகளின் கூட்டணியைச் சோ்ந்த அனைத்து எம்எல்ஏக்களும் பதவியேற்றனா்.

ராகுல் நா்வேகா் போட்டியின்றி தோ்வு: மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தலைவராக பாஜகவின் ராகுல் நா்வேகா் திங்கள்கிழமை போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

இதைத்தொடா்ந்து, தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான மகாயுதி கூட்டணி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதுகுறித்து ராகுல் நா்வேகா் கூறுகையில், ‘ இந்த தீா்மானம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதையடுத்து பேரவை ஒத்திவைக்கப்படுகிறது. மகாராஷ்டிர ஆளுநரின் உரைக்குப் பின் மீண்டும் பேரவைக் கூட்டத்தொடா் நடைபெறும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com