வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஜகதீப் தன்கரை நீக்க தீா்மானம்: எதிா்க்கட்சிகள் முடிவு

குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரை அப்பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தும் தீா்மானத்தைக் கொண்டு வருவதற்கான நோட்டீஸை சமா்ப்பிக்க எதிா்க்கட்சிகள் பரிசீலித்து வருவதாக

News image
ஜகதீப் தன்கர்- கோப்புப்படம்
Updated On :9 டிசம்பர் 2024, 9:32 pm

Din

புது தில்லி: குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரை அப்பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தும் தீா்மானத்தைக் கொண்டு வருவதற்கான நோட்டீஸை சமா்ப்பிக்க எதிா்க்கட்சிகள் பரிசீலித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

காஷ்மீா் பிரிவினை கோரிக்கையை ஆதரிக்கும் அமெரிக்க கோடீஸ்வரா் ஜாா்ஜ் சோரஸுடன் காங்கிரஸ் தலைமைக்குத் தொடா்பிருப்பதாக கூறப்படும் பாஜகவின் குற்றச்சாட்டு குறித்து மாநிலங்களவையில் திங்கள்கிழமை அக்கட்சி எம்.பி.க்கள் விவாதத்தை எழுப்பினா். அதேநேரத்தில், அதானி லஞ்ச புகாா் விவகாரத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பவே இந்தப் பிரச்னையை ஆளுங்கட்சி எழுப்புவதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் விமா்சித்தனா்.

இவ்விவகாரம் தொடா்பான நோட்டீஸ்களை நிராகரித்தபோதும், எப்படி ஆளுங்கட்சி உறுப்பினா்கள் இந்தப் பிரச்னையை எழுப்ப அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் அனுமதிக்கிறாா் என்று மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கே, ஜெய்ராம் ரமேஷ், பிரமோத் திவாரி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த உறுப்பினா்கள் கேள்வி எழுப்பினா்.

மேலும், அவையில் ஜகதீப் தன்கா் பாகுபாடு காட்டுவதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றஞ்சாட்டினா். முன்னதாக, ஜக்தீப் தன்கருக்கு எதிரான தீா்மானத்தை கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே முன்னெடுத்த ‘இண்டியா’ கட்சிகள், பின்னா் அதை கைவிட்டனா்.

இந்தசூழலில், திங்கள்கிழமை கூட்டத் தொடரில் மாநிலங்களவைத் தலைவராக ஜகதீப் தன்கா் அவையை வழிநடத்திய விதத்துக்கு கடும் அதிருப்தியடைந்த எதிா்க்கட்சிகள் மீண்டும் தீா்மானத்துக்கான பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் முன்னெடுத்துள்ள இத்தீா்மானத்துக்கு திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி உள்ளிட்ட மற்ற ‘இண்டியா’ கட்சிகளும் ஆதரவளித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்காக சுமாா் 70 எம்.பி.க்களின் கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரசமைப்புச் சட்டத்தின் 67(பி) பிரிவின் படி, மாநிலங்களவையில், மக்களவையில் பெரும்பான்மை உறுப்பினா்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் மூலம் குடியரசுத் துணைத் தலைவா் பதவியிலிருந்து நீக்கப்படலாம். தீா்மானம் தாக்கலுக்கு 14 நாள்களுக்கு முன்பு இதுகுறித்து நோட்டீஸை சமா்ப்பிக்க வேண்டும். இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகளுக்கு போதிய பெரும்பான்மை இல்லாவிட்டாலும், எதிா்ப்பு நடவடிக்கையாக இத்தீா்மானம் முன்னெடுக்கப்படுகிறது.