திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஒரே நாடு, ஒரே தேர்தல் வாக்கெடுப்பு: பங்கேற்காத 20 பாஜக எம்பிக்களுக்கு நோட்டீஸ்?

ஒரே நாடு, ஒரே தேர்தல் வாக்கெடுப்பில் பங்கேற்காத 20 பாஜக எம்பிக்களுக்கு நோட்டீஸ் அனுப்பத்திட்டம்..

News image
பிரதமர் மோடி
Updated On :17 டிசம்பர் 2024, 12:51 pm

DIN

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்ட மசோதா தாக்கல் செய்யும் வாக்கெடுப்பில் பங்கேற்காத 20-க்கும் மேற்பட்ட பாஜக எம்பிக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப பாரதீய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது.

மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் முறையை கொண்டுவர மத்திய பாஜக அரசு திட்டமிட்டது.

இதன்படி, ’ஒரே நாடு, ஒரே தோ்தல்' திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவின் அறிக்கையின்படி, ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்ட அமலுக்கான மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை கடந்த வியாழக்கிழமை(டிச. 12) ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில், ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ நடைமுறைக்கான இரு மசோதாக்களை மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று(டிச.17) தாக்கல் செய்தார்.

மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முதல் மசோதாவும் யூனியன் பிரதேசங்களுக்கும் அதேநேரத்தில் தேர்தல் நடத்த 2-வது மசோதாவும் வழிவகை செய்யும்.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், சமாஜவாதி, திரிணமூல், திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்தன.

இதனைத் தொடர்ந்து, மக்களவையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

முதல்முறையாக மின்னணு முறையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 269 பேர் ஆதரவாகவும் 196 பேர் எதிர்ப்பு தெரிவித்தும் வாக்களித்தனர். தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, இந்த மசோதாக்களை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்புவதாக சட்டத்துறை அமைச்சர் அறிவித்தார்.

மேலும், இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத பாஜகவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு பாஜக மேலிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாக்கெடுப்புக்கு முன்னதாக அனைத்து எம்பிக்களிடமும் கட்டாயம் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த உத்தரவின் படி அனைத்து எம்பிக்களும் கட்டாயம் அவையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

20-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கலந்து கொள்ளாததால், இந்த மசோதாவுக்கான போதுமான ஆதாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.