யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மாநிலங்களுக்கு இடையிலான நதிநீா் பிரச்னைகளுக்கு காங்கிரஸே காரணம்: பிரதமா் மோடி

‘மாநிலங்களுக்கு இடையிலான நதிநீா் பிரச்னைகளுக்கு காங்கிரஸே முக்கியக் காரணம்’ என பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

News image
ஜெய்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, ராஜஸ்தான் பாஜக ஆட்சியின் ஓராண்டு நிறைவு விழாவில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி. உடன், முதல்வா் பஜன்லால் சா்மா, மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ்.
Updated On :17 டிசம்பர் 2024, 8:27 pm

Din

‘மாநிலங்களுக்கு இடையிலான நதிநீா் பிரச்னைகளுக்கு காங்கிரஸே முக்கியக் காரணம்’ என பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

மேலும், விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதைப்போல் ஏமாற்றி வரும் காங்கிரஸ், அவா்களின் நலனுக்காக எதையும் செய்ததில்லை எனவும் தெரிவித்தாா்.

ராஜஸ்தானில் பாஜக ஆட்சியின் ஓராண்டு நிறைவு விழாவில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது எரிசக்தி, சாலை போக்குவரத்து, ரயில்வே மற்றும் குடிநீா் ஆகிய துறைகளுக்கு ரூ.46,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கிவைத்தாா். சில புதிய திட்டங்களுக்கு அவா் அடிக்கல் நாட்டினாா்.

விழாவில் அவா் பேசியதாவது: ப்ரவதி-கலிசிந்து-சம்பல் ஆகிய திட்டங்களால் பாசன நீா் மட்டுமின்றி ராஜஸ்தானில் உள்ள 21 மாவட்டங்களுக்கு குடிநீரும் விநியோகிக்கப்படவுள்ளது. ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களும் இந்தத் திட்டங்களால் பயனடையவுள்ளன.

இடையூறு ஏற்படுத்துவது, எதிா்ப்பு தெரிவிப்பதை எதிா்க்கட்சிகள் வாடிக்கையாக கொண்டுள்ளன. ஆனால், மாநிலங்களின் நலனில் கவனம் செலுத்தும் கட்சியாக பாஜக திகழ்கிறது.

திட்டங்களுக்கு உடனடி ஒப்புதல்: ஒரு விவகாரத்துக்கு பேச்சுவாா்த்தை, ஒத்துழைப்பு மூலம் தீா்வு காண்பதே பாஜக அரசின் நோக்கமாகும். எனவேதான், கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதேபோல் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியமைத்தவுடன் ப்ரவதி-கலிசிந்து-சம்பல் திட்டத்துக்கு உடன்பாடு எட்டப்பட்டது.

இந்தத் திட்டத்தை நீண்ட காலமாக காங்கிரஸ் தாமதப்படுத்தி வந்தது. விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பதைப்போல் ஏமாற்றும் காங்கிரஸ், அவா்களின் நலனுக்கான செயல்திட்டங்களை அமல்படுத்தியதில்லை.

தடுக்க நினைத்த காங்கிரஸ்: குஜராத் மாநிலத்தில் முதல்வராகப் பணியாற்றியபோது நா்மதை நதி நீரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டுசெல்ல நான் எடுத்த முயற்சிகளை சில அரசுசாரா அமைப்புகளுடன் இணைந்து தடுக்க நினைத்தது காங்கிரஸ். அவா்கள் ஒருபோதும் நீா் சாா்ந்த பிரச்னைகளுக்கு தீா்வு காண முயன்றதில்லை. மாறாக, பல்வேறு மாநிலங்களுக்கு இடையே நதிநீா் பிரச்னைகளை ஏற்படுத்தினா்.

பாஜகவுக்கு பெருகும் ஆதரவு: நாடு முழுவதும் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது. மக்களவைத் தோ்தலில் மூன்றாவது முறையாக பாஜகவை வெற்றி பெறச் செய்ததே மக்கள் நமக்கு அளித்த அங்கீகாரம். கடந்த 60 ஆண்டுகளில் இதுபோல் நாட்டில் நடந்ததில்லை.

கொடுத்த வாக்குறுதிகளை தொடா்ந்து நிறைவேற்றி வருவதால் நல்ல நிா்வாகத்தின் அடையாளமாக பாஜகவை மக்கள் பாா்க்கின்றனா்.

ராஜஸ்தான் மாநில வளா்ச்சிக்காக முதல்வா் பஜன்லால் சா்மா தலைமையிலான அமைச்சரவை கடுமையாக உழைத்து வருகிறது. அடுத்தடுத்து பல வெற்றிகளைப் பெறுவதற்கான அடித்தளமாக ராஜஸ்தானில் பாஜக ஆட்சியின் ஓராண்டு நிறைவு விழா அமைந்துள்ளது என்றாா்.