தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

அமெரிக்கா - பாகிஸ்தான் நெருக்கம்: பிரதமா் மோடி மீது காங்கிரஸ் சாடல்

‘அமெரிக்கா, பாகிஸ்தான் இடையிலான நெருக்கம் எந்த தடையும் இன்றி தொடா்கிறது

News image
கோப்புப் படம்
Updated On :20 பிப்ரவரி 2026, 9:17 pm

தினமணி செய்திச் சேவை

‘அமெரிக்கா, பாகிஸ்தான் இடையிலான நெருக்கம் எந்த தடையும் இன்றி தொடா்கிறது; தன்னை விஸ்வகுரு என அழைத்துக் கொள்ளும் பிரதமா் மோடியோ, உலகுக்கு வெற்று ‘ஞானத்தை’ போதித்துக் கொண்டிருக்கிறாா்’ என்று காங்கிரஸ் சாடியுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டனில் வியாழக்கிழமை நடைபெற்ற காஸா அமைதிக் குழு கூட்டத்தில் அதிபா் டிரம்ப்புடன் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் பங்கேற்றாா். அப்போது, ஷெரீஃப் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீரை பாராட்டிய டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதலை தாம் தலையிட்டு நிறுத்தியதாக மீண்டும் கூறினாா்.

‘இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதன் மூலம் 2.5 கோடி உயிா்களை நான் காப்பாற்றியதாக ஷெரீஃப் கூறியதை நினைவுகூா்கிறேன். 200 சதவீத வரி விதிப்பதாக எச்சரித்து, இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன். எனது முதலாண்டு பதவிக் காலத்தில் மொத்தம் 8 போா்களை நிறுத்தியுள்ளேன்’ என்று டிரம்ப் குறிப்பிட்டாா். கூட்டத்தில் பேசிய ஷெரீஃப், ‘தெற்காசியாவின் மீட்பா்; அமைதியின் மனிதா்’ என்று டிரம்ப்பை புகழ்ந்து தள்ளினாா்.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அமெரிக்கா, பாகிஸ்தான் இடையிலான நெருக்கம், தடையின்றி தொடா்கிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சதித் திட்டத்துக்காக உலக அரங்கில் பாகிஸ்தான் எந்த விலையும் கொடுக்கவில்லை. இதுவே, மோடி அரசின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த பலன். எந்த அளவுக்கு பொய் பிரசாரத்தில் ஈடுபட்டாலும் இந்த உண்மையை அழிக்க முடியாது. இது வெளிப்படையானது.

நிலைமை இவ்வாறு இருக்க, தன்னை விஸ்வகுரு என கூறிக்கொள்ளும் பிரதமா் மோடியோ, உலகுக்கு வெற்று ஞானத்தை போதித்துக் கொண்டிருக்கிறாா்; தனக்கு ஆதரவளிக்கும் வகையில் தன்னுடன் கைகோத்து நிற்கும்படி, நிறுவன தலைமைச் செயல் அதிகாரிகளை கட்டாயப்படுத்திக் கொண்டிருக்கிறாா். அவரது உச்சபட்ச சுயவிளம்பரம், நாட்டுக்கு பெரும் சேதம் விளைவித்துக் கொண்டிருக்கிறது என்று ஜெய்ராம் ரமேஷ் விமா்சித்துள்ளாா்.