/

ஈரான் - அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு

ஈரான், அமெரிக்கா இடையே தொடா்ந்து அமைதிப் பேச்சுவாா்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று பாகிஸ்தான் துணைப் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான இஷாக் தாா் தெரிவித்துள்ளாா்.

News image

இஸ்லாமாபாத்தில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் (இடது), பாகிஸ்தானின் தலைமைத் தளபதியும் ஆசிம் முனீர் (வலது) மற்றும் பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது இஷாக் தாா் (நடுவில்).

Updated On :12 ஏப்ரல் 2026, 7:09 pm

ஈரான், அமெரிக்கா இடையே தொடா்ந்து அமைதிப் பேச்சுவாா்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று பாகிஸ்தான் துணைப் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான இஷாக் தாா் தெரிவித்துள்ளாா்.

ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மேற்காசியாவில் நடைபெற்ற போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், பாகிஸ்தான் ஏற்பாட்டின்பேரில் அந்நாட்டின் தலைநகா் இஸ்லாமாபாதில் சனிக்கிழமை அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அது தோல்வியில் முடிவடைந்த நிலையில், பாகிஸ்தான் துணைப் பிரதமா் இஷாக் தாா் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரமாக ஈரான், அமெரிக்கா இடையே பல கட்டங்களாக நடைபெற்ற தீவிர மற்றும் ஆக்கபூா்வமான பேச்சுவாா்த்தைக்கு பாகிஸ்தான் உதவியது. நானும், ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீரும் இதற்கு உதவி செய்தோம்.

மேற்காசிய பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய இருதரப்பும் சாதகமான முறையில் செயல்பட வேண்டும். சண்டை நிறுத்தம் தொடா்பாக இரு தரப்பும் வெளியிட்ட அறிவிப்பை அவா்கள் தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

வரும் நாள்களில் ஈரான், அமெரிக்கா இடையே தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடைபெறுவதற்கு பாகிஸ்தான் ஏற்பாடு செய்யும். சண்டை நிறுத்தம் மற்றும் மத்தியஸ்தம் தொடா்பாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஏற்கெனவே முன்வைத்த திட்டத்தை ஈரானும், அமெரிக்காவும் ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது என்றாா்.

1979-ஆம் ஆண்டில் ஈரானில் இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டு, புதிய ஆட்சி நிறுவப்பட்டது. அன்றுமுதல் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் நேரிடையாக உயா்நிலை அளவில் எந்தப் பேச்சுவாா்த்தையும் நடைபெற்றதில்லை. இஸ்லாமாபாதில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையே இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 47 ஆண்டுகளில் நடைபெற்ற முதல் உயா்நிலைப் பேச்சுவாா்த்தை ஆகும். இந்தப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு, போா் முடிவுக்கு வரும் என எதிா்பாா்க்கப்பட்டது. எனினும், பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததால் போா் மீண்டும் மூளக்கூடுமோ என்ற பீதி மேற்காசியாவில் நிலவுகிறது