அரசு மருத்துவமனையில் மாந்திரீக சடங்குகள் செய்தவர்.
அரசு மருத்துவமனையில் மாந்திரீக சடங்குகள் செய்தவர்.(Photo | Screengrab)

அரசு மருத்துவமனை ’ஐசியு’வில் மாந்திரீக சடங்கு!

குஜராத் அரசு மருத்துவமனையில் மாந்திரீக சடங்கு செய்யப்பட்டது பற்றி...
Published on

குஜராத் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மாந்திரீக சடங்கு செய்த காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

நோயால் பாதிக்கப்படுபவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவது வழக்கம். அவர்களின் உடல்நிலை தீவிரமடைந்தால், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பார்கள்.

ஆனால், குஜராத் மாநில அகமதாபாத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குள் மாந்திரீகம் செய்பவரால் சடங்குகள் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக தீவிர சிகிச்சைப் பிரிவு என்பது மக்களுக்கு தடை விதிக்கப்பட்ட பகுதி. ஆனால், புதன்கிழமை இணையத்தில் வைரலான விடியோவில், மாந்திரீகம் செய்பவர் மருத்துவமனையின் நுழைவு வாயிலில் இருந்து ஐசியு வரை செல்லும் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த விடியோவில் மாந்திரீகம் செய்பவரிடம் உங்களால்தான் எங்களின் உறவினர் பிழைத்தார் என்று உறவினர்கள் பாராட்டும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.

இந்த விடியோ இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், குஜராத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களுடன் பேசிய மருத்துவமனை கண்காணிப்பாளர் ராகேஷ் ஜோஷி கூறியதாவது:

“முதல்கட்ட விசாரணையில் நோயாளியின் உறவினராக மாந்திரீகவாதியை அழைத்துச் சென்றனர், உறவினர்களுக்கு வழங்கப்பட்ட நுழைவுச் சீட்டை தவறாக பயன்படுத்தி ஐசியுவுக்குள் அவர் சென்றார். நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க போடப்பட்டிருந்த திரைகளை விலக்கி சடங்குகளை செய்துள்ளனர்.

குறிப்பிட்ட அந்த நோயாளி, வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையில் உள்ளார். அவர் படிப்படியாக குணமடைந்து வருகிறார். மூட நம்பிக்கை முறையால் அவர் குணமடைந்தார் என்பது அர்த்தமற்றது.

சிசிடிவி காட்சிகளை முழுமையாக பரிசோதித்து வருகிறோம். 15 முதல் 20 நாள்களுக்கு முன்னதாக நடந்த சம்பவமாக இருக்கலாம். எதிர்காலத்தில் விதிமீறல்களை தடுக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். வேறெந்த மருத்துவமனையிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உறுதி செய்யப்பட்டும்” என்றார்.

இதனிடையே, பல்வேறு மருத்துவமனைகளில் மாந்திரீக சடங்குகளை விடியோ எடுத்து நோயாளிகளை குணப்படுத்துவதாக பதிவிட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com