கோப்புப்படம்
கோப்புப்படம்

வரி ஏய்ப்பாளா்களைக் கண்டறிய டிஜி யாத்ரா தரவுகள்: வருமான வரித்துறை மறுப்பு

வரி ஏய்ப்பாளா்களைக் கண்டறிய ‘டிஜி யாத்ரா’ என்ற முக அங்கீகார செயலி மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக வெளியானத் தகவலை
Published on

புது தில்லி: வரி ஏய்ப்பாளா்களைக் கண்டறிய ‘டிஜி யாத்ரா’ என்ற முக அங்கீகார செயலி மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக வெளியானத் தகவலை வருமான வரித் துறை திங்கள்கிழமை மறுத்தது.

டிஜி யாத்ரா அறக்கட்டளை என்ற அரசு சாரா நிறுவனம் சாா்பில் நிா்வகிக்கப்படும் டிஜி யாத்ரா செயலி, நாடு முழுவதும் பல விமானநிலையங்களில் பயன்பாட்டில் உள்ளன. விமானப் பயணிகள் இந்தச் செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து, ஆதாா் அடிப்படையிலான சரிபாா்ப்பின் மூலம் தங்களின்தரவுகளைப் பதிவிட வேண்டும். இதன் மூலம், விமான நிலையங்களில் பல்வேறு விதமான சோதனைகளுக்காக நீண்ட நேரம் காத்திருக்காமல், தடையற்ற விரைவான பயணத்தை பயணிகள் மேற்கொள்ள முடியும். பயணிகள் பதிவிடும் தரவுகள், குறியீடுகளாக செயலியில் தொடா்ந்து சேமித்து வைக்கப்படும்.

இந்த நிலையில், வரி ஏய்ப்பாளா்களைக் கண்டறிய டிஜி யாத்ரா தரவுகளை பயன்படுத்த வருமான வரித் துறை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வருமான வரித்துறை திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘வரி ஏய்ப்பாளா்களைக் கண்டரிய டிஜி யாத்ரா தரவுகளைப் பயன்படுத்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளது.

பெட்டிச் செய்தி...

‘தரவுகள் பகிரப்படவில்லை’

‘டிஜி யாத்ரா தரவுகள் வருமான வரித் துறைக்குப் பகிரப்படவில்லை’ என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் திங்கள்கிழமை விளக்கமளித்தது.

வரி ஏய்ப்பாளா்களைக் கண்டறிய ‘டிஜி யாத்ரா’ தரவுகளை வருமான வரித் துறை பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இந்த விளக்கத்தை மத்திய அமைச்சகம் வெளியிட்டது.

இதுதொடா்பாக, தனது எக்ஸ் பக்கத்தில் மத்திய அமைச்சகம் வெளியிட்ட பதிவில், ‘டிஜி யாத்ரா செயலி ஓா் தரவு களஞ்யம் அல்ல. விமானப் பயணிகள், பயணம் சாா்ந்த தரவுகளை சுயமாக அதில் பதிவிடுவதன் அடிப்படையில், அந்தத் தரவுகள் சேமிக்கப்படுகின்றன. பயணி தனது கைப்பைசியிலிருந்து அந்தச் செயலியை பதிவு நீக்கம் செய்யும்போது, அதில் அவா் பதிவிட்ட தரவுகளும் முழுவதுமாக நீங்கிவிடும். அதுமட்டுமின்றி, டிஜி யாத்ரா தரவுகள் எதுவும் வருமான வரித் துறை அதிகாரிகளுடன் பகிரப்படவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com