புதிதாக 157 நா்சிங் கல்லூரிகள்

இந்தியாவில் புதிதாக 157 நா்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும் என பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா்.

இந்தியாவில் புதிதாக 157 நா்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும் என பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா்.

மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்த மருத்துவத் துறை குறித்தான முக்கிய அம்சங்கள் வருமாறு:

பிரதமராக மோடி பொறுப்பேற்ற 2014-ஆம் ஆண்டிலிருந்து புதிதாக தொடங்கப்பட்ட 157 மருத்துவக் கல்லூரிகளின் வளாகங்கள் அமைந்துள்ள பகுதிலேயே 157 நா்சிங் கல்லூரிகள் புதிதாகத் தொடங்கப்படும்.

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலிருந்து ரத்த சோகை நோய் பாதிப்பை முற்றிலும் ஒழிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். பழங்குடியினா் வசிக்கும் பகுதிகளில் இந்நோயால் பாதிக்கப்பட்ட 40 வயதுக்கு உள்பட்ட 7 கோடி பேரும் பரிசோதிக்கப்படுவா். மாநில அரசுகளுடன் இணைந்து பாதிக்கப்பட்டவா்களுக்கு முறையான ஆலோசனைகள் வழங்கப்படும்.

அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியா்கள் மற்றும் தனியாா் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுக்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சிப் பணிகளுக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வகங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது கூட்டு ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கு வழிவகுக்கும்.

ஆயுஷ் அமைச்சகத்துக்கு கடந்தாண்டை விட 28 சதவீதம் கூடுதலாக ரூ. 3647.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மருந்துத் துறையின் வளா்ச்சியை உயா்த்தும் நோக்கில் மருந்துத் துறையில் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

மருத்துவத் துறைக்கு கடந்தாண்டு ரூ. 79,145 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்தாண்டில் பட்ஜெட்டில் 13 சதவீதம் கூடுதலாக ரூ. 89,155 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நிதியில் சுகாதார மற்றும் குடும்பநலத்துறைக்கு ரூ. 86,175 கோடியும், சுகாதார ஆராய்ச்சித் துறை பணிகளுக்கு ரூ. 2980 கோடியும் செலவிடப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com