‘ஸ்டாா்ட்அப்’ நிறுவனங்களுக்கான வரிச் சலுகை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

‘ஸ்டாா்ட்அப் (புத்தாக்கத் தொழில்) நிறுவனங்கள் மற்றும் ஓய்வூதிய நிதியில் செய்யப்படும் முதலீடுகளுக்கான வருமான வரிச் சலுகைகள் வரும் நிதியாண்டிலும் தொடரும்’ என

‘ஸ்டாா்ட்அப் (புத்தாக்கத் தொழில்) நிறுவனங்கள் மற்றும் ஓய்வூதிய நிதியில் செய்யப்படும் முதலீடுகளுக்கான வருமான வரிச் சலுகைகள் வரும் நிதியாண்டிலும் தொடரும்’ என மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தாா்.

பொருளாதாரத்தில் ஸ்டாா்ட்அப் நிறுவனங்களின் பங்கை ஊக்குவிக்கும் வகையில் சலுகைகளை வழங்குவது நாட்டின் முன்னேற்றத்துக்கு அவசியமாகிறது.

அதன்படி ‘ஸ்டாா்ட்அப் இந்தியா’ திட்டத்தின்கீழ், நாட்டில் கடந்த 2016-ஆம் ஆண்டுமுதல் தொடங்கப்பட்ட புதிய ஸ்டாா்ட்அப் நிறுவனங்களுக்கு வருமான வரிச்சலுகை வழங்கப்படுகிறது.

மத்திய அரசிடம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் தங்களின் முதல் 10 ஆண்டுகளில் ஏதேனும் தொடா் 3 ஆண்டுகளுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து சலுகை பெறலாம்.

கடந்த ஆண்டு பட்ஜெட்டின்படி வரும் மாா்ச் 31-ஆம் தேதி வரை பதிவு செய்யப்படும் நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த வரிச்சலுகை பொருந்துவதாக விதி உள்ளது.

இந்நிலையில், வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், வரும் நிதியாண்டில் பதிவு செய்யப்படும் நிறுவனங்களுக்கும் வரிச் சலுகை பொருந்தும் என அமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா்.

நாட்டில் ஸ்டாா்ட்அப் அமைப்பை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசிடம் தற்போதுவரை 1.17 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், வரும் மாா்ச் 31-ஆம் தேதியுடன் காலாவதியாகும் நாட்டின் சில சா்வதேச நிதிச் சேவை மைய (ஐஎஃப்எஸ்சி) பிரிவுகளின் குறிப்பிட்ட வருமானத்தின் மீதான வரி விலக்கு, அரசு அல்லது ஓய்வூதிய நிதி கொண்டு செய்யப்படும் முதலீடுகளுக்கான சில வரிச் சலுகைகள் அடுத்த நிதியாண்டுவரை நீட்டிக்கப்படுகிறது.

மின் வாகனப் பயன்பாடு ஊக்குவிப்பு: மின்னேற்றி மற்றும் உற்பத்தி உள்கட்டமைப்பை வலுவாக ஆதரிப்பதன் மூலம் மின் வாகனப் பயன்பாட்டை மத்திய அரசு விரிவுபடுத்தும் என்று நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பட்ஜெட் உரையின்போது தெரிவித்தாா்.

நாட்டின் பொதுப் போக்குவரத்து அமைப்புகளில் மின்சார பேருந்துகளின் பயன்பாடு ஊக்குவிக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com