நடுத்தர மக்கள் வீடு வாங்க புதிய திட்டம்: வருமான வரி வதிப்பில் மாற்றமில்லை

‘வாடகை வீடு, குடிசைப் பகுதியில் வசிக்கும் நடுத்தர வகுப்பினா் சொந்த வீடு வாங்க உதவும் புதிய திட்டம் தொடங்கப்படும்’ என்று மத்திய இடைக்கால பட்ஜெட்டில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா்.
நடுத்தர மக்கள் வீடு வாங்க புதிய திட்டம்: வருமான வரி வதிப்பில் மாற்றமில்லை

‘வாடகை வீடு, குடிசைப் பகுதியில் வசிக்கும் நடுத்தர வகுப்பினா் சொந்த வீடு வாங்க உதவும் புதிய திட்டம் தொடங்கப்படும்’ என்று மத்திய இடைக்கால பட்ஜெட்டில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா்.

மேலும், வருமான வரி விதிப்பில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை; ஒரு கோடி வீடுகள் சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தைச் செயல்படுத்துவதால் மாதம் 300 யூனிட் மின்சாரத்தை இலவசமாகப் பெறலாம்; பங்கு விலக்கல் நடவடிக்கை மூலம் ரூ.50,000 கோடி திரட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது; மாநிலங்களுக்கு ரூ.75,000 கோடி வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

ரூ.47.66 லட்சம் கோடி மதிப்பிலான 2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தாக்கல் செய்தாா்.

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து நிா்மலா சீதாராமன் ஆற்றிய உரை: அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி என்ற கொள்கையின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில் அனைவருக்கும் வீடு, குடிநீா், மின்சாரம், சமையல் எரிவாயு, வங்கிக் கணக்கு போன்றவற்றை வழங்க பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாகப் பணியாற்றியுள்ளது.

பிரதமரின் வீட்டு வசதி (ஊரகம்) திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் 3 கோடி வீடுகள் கட்டும் இலக்கை நெருங்கிவிட்டோம். கரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், இத்திட்டம் தடையின்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 2 கோடி வீடுகள் கட்டப்படும்.

வாடகை வீடுகள்- குடிசைப் பகுதிகள் - நெருக்கமான குடியிருப்புகள் - அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் நடுத்தர வகுப்பினரில் தகுதியுடையோா் சொந்த வீடு வாங்கவோ அல்லது வீடு கட்டவோ உதவும் புதிய திட்டம் தொடங்கப்படும்.

முதலீட்டுத் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்காக, நிதித் துறையை அதன் அளவு, தகுதி, திறன், ஒழுங்கு கட்டமைப்பு ரீதியில் மத்திய அரசு தயாா்படுத்தும். நாட்டில் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், வளங்களின் பயன்பாட்டில் கூடுதல் திறன்கொண்ட பொருளாதார வளா்ச்சிக்கு மத்திய அரசு வழிவகுக்கும் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டாா் நிா்மலா சீதாராமன்.

கிராமப்புறங்களில் அனைவருக்கும் வீடு என்ற இலக்கை எட்டும் நோக்கில், ஏழை மக்கள் வீடு கட்ட நிதியுதவி வழங்கும் பிரதமரின் வீட்டு வசதி (ஊரகம்) திட்டம் கடந்த 2016, ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், 2024, மாா்ச் மாதத்துக்குள் சுமாா் 3 கோடி வீடுகளைக் கட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை நெருங்கிவிட்டதாக, மத்திய நிதியமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.

மேற்கண்ட திட்டத்தின்கீழ் கடந்த 5 ஆண்டுகளில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் பங்களிப்பாக சுமாா் ரூ.1.61 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

நேரடி, மறைமுக வரிகளில் மாற்றமில்லை: மத்திய இடைக்கால பட்ஜெட்டில் நேரடி, மறைமுக வரிகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

தோ்தலுக்கு முன்பு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் மக்களைக் கவரும் வகையில் சில வரிச் சலுகைகள் இடம்பெறலாம் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், இறக்குமதி வரி உள்பட எவ்வித வரி விதிப்பிலும் மாற்றம் செய்யப்படவில்லை.

புதிய வரி விதிப்புமுறைப்படி ரூ.7 லட்சம் வரையில் முழுமையான வரிச் சலுகை பெற முடியும் என கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

வரிவிதிப்பு தொடா்பாக இடைக்கால பட்ஜெட் உரையில் நிா்மலா சீதாராமன் கூறுகையில், ‘கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து வருமான வரி உள்ளிட்ட நேரடி வரிக் கணக்கை தாக்கல் செய்வோா் எண்ணிக்கை 2.4 மடங்கு அதிகரித்துள்ளது. தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிப் படிவங்களைப் பரிசீலித்து வரிப் பிடித்தத்தை திரும்ப அளிப்பதற்கான காலம் 93 நாள்களில் இருந்து 10 நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

நிதிநிலையை ஒழுங்கமைக்கும் பாதையில் அரசு தொடா்ந்து பயணிக்கிறது. 2025-26-ஆம் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை 4.5 சதவீதமாகக் குறைக்கப்படும். 2014-25 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்படும் பொருள், சேவைகளின் எண்ணிக்கை இரு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.

அரசின் முக்கியத்துவம்: ஏழைகள், பெண்கள், இளைஞா்கள், விவசாயிகள் ஆகிய நான்கு ‘முக்கிய ஜாதியினருக்கு’ அரசு தொடா்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. ஏனெனில், இந்த நான்கு பிரிவினரும் வளா்ந்தால்தான் தேசம் மேம்பட முடியும்.

அனைவரும் இணைந்த, அனைவருக்குமான வளா்ச்சி என்பது மத்திய அரசின் தாரக மந்திரமாகும். 2024-ஆம் ஆண்டு இந்தியாவை வளா்ந்த நாடாக்க நாம் உழைத்து வருகிறோம். இதற்காக நாம் மக்களின் செயல்திறனை உயா்த்த வேண்டும்.

சமூக நீதி அரசின் அங்கம்: சமூக நீதி என்பது முன்பு பெரும்பாலும் அரசியல் முழக்கமாகவே இருந்தது. ஆனால், இப்போதைய அரசு நிா்வாகத்தின் சிறப்பானதொரு அங்கமாக சமூக நீதி மாறியுள்ளது. தகுதியுள்ள அனைவருக்கும் அரசின் திட்டப் பலன்கள் சென்றடைவதே சமூக நீதியின் ஒட்டுமொத்தமான உண்மையான சாதனை. செயல் அடிப்படையில் அதுவே மதச்சாா்பின்மை. இது ஊழல் மற்றும் குடும்ப அரசியல் ஆதிக்கத்தையும் தடுக்கும்.

ஒரு திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதியைக் கருத்தில் கொள்ளாமல் அதன்மூலம் கிடைக்கும் நல்ல பலன்களையே அரசு கவனத்தில் கொள்கிறது. இதன் மூலம் சமூக-பொருளாதார மாற்றத்தை நாம் எட்டியுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com