ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. பூனம் பாண்டே விவகாரத்தில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

ஹிந்தி திரைப்பட நடிகை பூனம் பாண்டே, கருப்பைவாய் புற்றுநோயால் பலியானதாக நேற்று தகவல்வெளியானது.
பூனம் பாண்டே
பூனம் பாண்டே


ஹிந்தி திரைப்பட நடிகை பூனம் பாண்டே, கருப்பைவாய் புற்றுநோயால் பலியானதாக நேற்று தகவல்வெளியான நிலையில், அது உண்மையல்ல, விழிப்புணர்வுக்காக செய்தது என்று பூனம் பாண்டேவே இன்று நேரில் தோன்றி விளக்கம் கொடுத்துள்ளார்.

முன்னதாக, பூனம் பாண்டே மரணித்துவிட்டதாக அவரது இன்ஸ்டகிராம் பக்கத்திலேயே பதிவு செய்யப்பட்டிருந்தது. அவரது நெருங்கிய உதவியாளர்தான் இறப்பை உறுதி செய்திருக்கிறார் என்றும் நம்பப்பட்டது.

ஆனாலும், அவரது உண்மையான ரசிகர்கள், இந்த செய்தி உண்மையாக இருக்கக் கூடாது என்று மிகவும் வேண்டிக்கொண்டனர். பிராங்க் போல ஏதோ ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்த்தனர்.

மறுபக்கம் 32 வயதில் ஒரு இளம் நடிகை மரணித்துவிட்டாரே என்று ஏராளமானோர் தனது ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்திருந்தனர். சில முன்னணி நடிகர், நடிகைகள் கூட, தங்களது வட்டாரத்தில் இது உண்மைதானா என்பதை உறுதிசெய்துகொள்ளாமல், சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களையும் பதிவிட்டிருந்தனர்.

இந்த நிலையில்தான், பூனம் பாண்டேவின் ரசிகர்களின் வேண்டுதல் வீண்போகவில்லை. அது பிராங்க் தான். அவர் நான் உயிரோடு இருக்கிறேன் என்று இன்று விடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

இந்த விடியோவைப் பார்த்ததும், பூனம் பாண்டேவின் ரசிகர்கள் துள்ளிக்குதிக்க, மற்றவர்களோ ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தான் மரணித்துவிட்டதாக புரளி கிளப்பியதை மன்னிக்கவே முடியாது என்று கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார்கள். இது மோசமான செயல், இரங்கல் தெரிவித்து வருந்திய ரசிகர்களை ஏமாற்றியது போல இருக்கிறது என்றும் சமூக ஊடகங்களில் இன்று முழுக்க பூனம் பாண்டேவை வறுத்தெடுத்து வருகிறார்கள் நெட்டிசனகள்.

அது மட்டுமா? இப்படி ஒரு நடிகை மரணமடைந்துவிட்டார் என்று செய்தி வெளியானதும், அதனை ஒரு பத்திரிகைக் கூடவா உறுதி செய்துகொள்ளவில்லை, அவர் வசிக்கும் பகுதிக்குச் சென்று என்ன நடந்தது என்பதை ஒரு பத்திரிகையாளர் கூடவா செய்தியாக்கவில்லை. ஒருவர் இறந்துவிட்டார் என்றால், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் புகைப்படங்கள் வெளியாகியிருக்குமே இறுதிச் சடங்கு நடந்திருக்குமே,  அவரது நெருங்கிய வட்டாரங்களிடம் அவரது உடல் எங்கே வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்துக் கூடவா ஊடகங்கள் விசாரிக்கவில்லை என்று அடுக்கடுக்கான கேள்விக்கணைகளைத் தொடுக்கின்றனர்.

ஒருவருக்குக் கூடவா ஒரு உண்மை தெரிஞ்சாகணும் என்று தோன்றவில்லை என பல விதங்களில் நெட்டிசன்கள் தங்களது எதிர்ப்புகளையும் சந்தேகங்களையும் அதிருப்தியையும் பதிவிட்டு வருகிறார்கள்.

கூடவே, ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்தில் நடந்த பொதுநிகழ்ச்சிகளில் கூட அவர் உற்சாகத்துடன் கலந்து கொண்ட விடியோக்களும், புகைப்படங்களும் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. அதுமட்டுமா, அவரே தனது சமூக வலைத்தளப் பக்கங்களிலும் இணைத்திருந்த நிலையில், வெறும் 10 நாள்களில் இப்படி ஒரு செய்தி வெளியானது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்ததுதான். ஆனால், அவரது நெருங்கிய வட்டாரங்களும், உதவியாளரும் உறுதி செய்ததாலே ஊடகங்களில் வெளியானதாகவும் கூறப்படுகிறது.


மேலும், கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா குறித்தும் அவர் தனது புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com