இமாச்சலில் கார் விபத்து: வெற்றி துரைசாமியின் நண்பர் உயிருடன் மீட்பு

வெற்றி துரைசாமியை தேடும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில், வெள்ளக்கோவிலைச் சேர்ந்த அவரது நண்பர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
வெற்றி துரைசாமியின் நண்பர் உயிருடன் மீட்பு
வெற்றி துரைசாமியின் நண்பர் உயிருடன் மீட்பு

வெள்ளக்கோவில்: இமாச்சலில் சட்லஜ் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வெற்றி துரைசாமியை தேடும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில், வெள்ளக்கோவிலைச் சேர்ந்த அவரது நண்பர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

சட்லஜ் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், வெற்றி துரைசாமியின் நண்பர் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் சொரியங்கிணத்துப்பாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் எஸ்.கோபிநாத் (32) காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை முன்னாள் மேயர், மனித நேய அறக்கட்டளை நிறுவனர், அதிமுக பிரமுகர் சைதை துரைசாமியுடைய சொந்த பூர்வீகம் கரூர் மாவட்டம், தென்னிலை, தும்பிவாடி கிராமம். இவருடைய மகன் வெற்றி துரைசாமி (45) சென்னை, நந்தனம் சி.ஐ.டி. நகரில் வசித்து வருகிறார்.

வெற்றி துரைசாமியும் அவரது நண்பர் கோபிநாத் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இமாச்சல பிரதேசம் சிம்லாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு இன்னோவா கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் சென்று பல இடங்களைப் பார்த்துள்ளனர். கார் டிரைவர் சிம்லாவைச் சேர்ந்த டபோ மகன் டன்ஜின்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நேரத்தில் அந்த சொகுசு காரில் காசங்காடா என்கிற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, பனிமூட்டம் அதிகமாக இருந்துள்ளது. அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அருகிலுள்ள சட்லஜ் நதியில் கவிழ்ந்தது.

இதையடுத்து தேசிய மீட்புப் படையினர் கார் மற்றும் அதிலிருந்த மூன்று பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதில் கார் ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டார். கோபிநாத் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். அவர் மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். வெற்றி துரைசாமியை இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை. மாயமான அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காவல்துறை மற்றும் தகவலறிந்த வட்டாரங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com