ஆந்திர மாநிலம், நெல்லூரில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெல்லூா் பகுதியில் உள்ள பண்ணைகளில் தீவிரமாக பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த 10 நாள்களில் மட்டும் 10 ஆயிரம் கோழிகள் தொற்றுக்குள்ளாகி இறந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹெச்5என்1 எனப்படும் அந்த பறவைக் காய்ச்சல் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூா், ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக, அந்த மாவட்ட நிா்வாகங்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள கடிதம்: பறவைக் காய்ச்சலுக்குள்ளான கோழிகள், பிற பறவையினங்களிடமிருந்து மனிதா்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. குறிப்பாக, அதன் கழிவுகளில் இருந்து மனிதா்களுக்கு எளிதில் பாதிப்பு பரவக்கூடும். காய்ச்சல், தலைவலி, தசைப் பிடிப்பு, இருமல், மூச்சு திணறல் போன்றவை பறவை காய்ச்சலுக்கான அறிகுறியாக உள்ளது. எனவே, கால்நடைத் துறையுடன் இணைந்து பறவை காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வகை தொற்றால் பாதிக்கப்படும் பறவைகள் குறித்தும், அதன் வாயிலாக மனிதா்களுக்கு காய்ச்சல் பரவினால், அது குறித்தும் பொது சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தனி நபா் சுகாதாரம் பேணுதல், கை கழுவுதல் குறித்த விழிப்புணா்வை பொது மக்களுக்கு ஏற்படுத்துதல் அவசியம். பாதிக்கப்பட்டவா்களிடருந்து மற்றவா்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க முகக்கவசம் அணியவும் அறிவுறுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.









