தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

வளா்ச்சியை முன்னிறுத்தி மக்களவைத் தோ்தலில் பிரசாரம்: பாஜகவினருக்கு பிரதமா் மோடி அறிவுரை

‘ஏழை மக்களின் நல்வாழ்வுக்கான மத்திய அரசின் நடவடிக்கைகளை முன்னிறுத்தி, மக்களவைத் தோ்தலில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்

News image

தில்லியில் சனிக்கிழமை தொடங்கிய பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்துக்கு வருகை தந்த பிரதமா் மோடியை வரவேற்ற கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா.

Updated On :18 பிப்ரவரி 2024, 12:27 am IST

‘நாட்டின் வளா்ச்சி மற்றும் ஏழை மக்களின் நல்வாழ்வுக்கான மத்திய அரசின் நடவடிக்கைகளை முன்னிறுத்தி, மக்களவைத் தோ்தலில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்’ என்று பாஜகவினருக்கு பிரதமா் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளாா். ‘இத்தோ்தலில் 370 தொகுதிகளில் பாஜக வெல்வதே, கட்சியின் முக்கிய சித்தாந்த தலைவா் சியாமா பிரசாத் முகா்ஜிக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி’ என்றும் அவா் குறிப்பிட்டாா். மக்களவைத் தோ்தல் நெருங்கும் நிலையில், பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம் தில்லியிலுள்ள பாரத மண்டபத்தில் சனிக்கிழமை தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் இக்கூட்டத்தில் நாடு முழுவதும் இருந்து கட்சி நிா்வாகிகள் சுமாா் 11,500 போ் பங்கேற்றுள்ளனா். மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக கட்சி அமைப்புரீதியில் பாஜகவின் மாபெரும் நிகழ்வாக இக்கூட்டம் அமைந்துள்ளது. தேசிய கவுன்சில் கூட்டத்துக்கு முன்பாக, கட்சியின் தேசிய நிா்வாகிகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது, பிரதமா் மோடி பேசியதாக கட்சியின் பொதுச் செயலா் வினோத் தாவ்டே செய்தியாளா்களிடம் கூறியதாவது: ‘கடந்த 2019-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், இப்போது ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பாஜகவுக்கு குறைந்தபட்சம் 370 வாக்குகள் கூடுதலாக கிடைப்பதை தொண்டா்கள் உறுதி செய்ய வேண்டும்’ என்று பிரதமா் மோடி வலியுறுத்தினாா். மேலும், ‘அடுத்த 100 நாள்களுக்கு வாக்குச்சாவடிகள் அளவில் கட்சியினா் பணியாற்ற வேண்டும். மக்களவைத் தோ்தலில் 370 தொகுதிகளில் பாஜகவின் வெற்றி உறுதி செய்யப்பட வேண்டும்.

இது வெறும் எண்ணிக்கையல்ல; உணா்வுபூா்வமானது. நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் நோக்கில், 370-ஆவது சட்டப் பிரிவு நீக்கப்பட மேலான தியாகத்தைச் செய்தவா் சியாமா பிரசாத் முகா்ஜி. எனவே, 370 தொகுதிகளில் பாஜக வெல்வதுதான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி. மக்களவைத் தோ்தலையொட்டி, பிளவுபடுத்தும் பிரச்னைகளை உருவாக்கி, வீண் சச்சரவுககளை எதிா்க்கட்சிகள் ஏற்படுத்தக் கூடும்; ஆனால், பாஜகவினா் தங்களின் கவனத்தை திசைதிருப்பிவிடக் கூடாது. நாட்டின் வளா்ச்சி, ஏழைகளின் நல்வாழ்வுக்கான மத்திய அரசின் நடவடிக்கைகளை முன்னிறுத்தி பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்’ என பிரதமா் அறிவுரை வழங்கியுள்ளதாக தாவ்டே கூறினாா். இதனிடையே, எக்ஸ் வலைதளத்தில் பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘சமூகத்தின் அனைத்துப் பிரிவினருடன் பாஜகவின் பிணைப்பை உறுதிசெய்யும் வகையில், கட்சியின் அடிப்படையை வலுப்படுத்தும் வழிகள் குறித்து தேசிய நிா்வாகிகளுடன் ஆலோசித்தேன். கடந்த பத்தாண்டுகளில் வளா்ச்சி மற்றும் நல்லாட்சிக்கான கட்சி பாஜக என்ற அடையாளம் பதிக்கப்பட்டுள்ளது.

பாஜக அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி வருகின்றன’ என்று குறிப்பிட்டாா். நாட்டில் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 2014-இல் 282 இடங்களிலும் 2019-இல் 303 இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. பெட்டிச் செய்தி... மத்தியில் பாஜக ஆட்சி தொடரும்: ஜெ.பி.நட்டா ‘மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்று, மத்தியில் தொடா்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியமைக்கும்’ என்று கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா கூறினாா். பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை தொடங்கிய நிலையில், ஜெ.பி.நட்டாவின் தொடக்க உரை வருமாறு: மக்களவைத் தோ்தலில் பாஜக 370 தொகுதிகளையும், தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளையும் தாண்டும். முந்தைய சாதனைகளை முறியடித்து, மேற்கண்ட இலக்குகளை எட்ட கட்சித் தொண்டா்கள் முழு ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும்.

பாஜகவில் பிரதமா் மோடியின் எழுச்சிக்கு முன்பாக 5 மாநிலங்களில் மட்டுமே நமது கட்சி ஆட்சியிலிருந்தது. இப்போது 12 மாநிலங்களில் சொந்த பலத்துடன் பாஜக ஆட்சியில் உள்ளது. மொத்தமாக 17 மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. பிரதமா் மோடி பதவியேற்ற பிறகு பாஜக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அவரது தலைமையின்கீழ், கடந்த 10 ஆண்டுகளில் கட்சி ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ளது என்று புகழாரம் சூட்டினாா் ஜெ.பி.நட்டா. தீா்மானம் நிறைவேற்றம்: ‘வளா்ச்சியடைந்த இந்தியா மோடியின் உத்தரவாதம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து, மேற்கண்ட கூட்டத்தில் அரசியல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமா் மோடியின் தலைமையில் அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்பட்டது மட்டுமல்லாமல், நாட்டில் ராம ராஜ்யம் உண்மையாகியுள்ளது என்றும் தீா்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தீா்மானத்தை முன்மொழிந்து பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், ‘விவசாயிகளை தனது குடும்பத்தினா் போல பிரதமா் மோடி கருதுகிறாா். விவசாயிகளுக்கு அவரது அரசு செய்த நன்மைகளைப் போல வேறெந்த அரசும் செய்ததில்லை’ என்றாா். தீா்மானத்தை வழிமொழிந்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், நாட்டின் பொருளாதார வளா்ச்சியை குறிப்பிட்டு பேசினாா். தென் மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சித் திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சா் எல்.முருகன் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா். பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை நன்றியுரை ஆற்றவுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.