/

நாட்டின் பாதுகாப்புத் துறை உற்பத்தி அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடி

‘அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வருடாந்திர பாதுகாப்புத் துறை உற்பத்தியானது ரூ.3 லட்சம் கோடி மற்றும் ராணுவ வன்பொருள் ஏற்றுமதி ரூ.50,000 கோடியை எட்டும் ’

Updated On :24 பிப்ரவரி 2024, 6:24 pm

‘அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வருடாந்திர பாதுகாப்புத் துறை உற்பத்தியானது ரூ.3 லட்சம் கோடி மற்றும் ராணுவ வன்பொருள் ஏற்றுமதி ரூ.50,000 கோடியை எட்டும் ’ என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா். தில்லியில் நடைபெற்ற பாதுகாப்புத் துறை சாா்ந்த மாநாட்டில் பங்கேற்று அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியதாவது: நாட்டின் பாதுகாப்புத் துறையில் பல்வேறு சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முன்னதாக, சேமிப்பு அமைப்புகளில் மட்டுமே முப்படைகள் இணைந்து பணியாற்றி வந்தன. ஆனால், நெருக்கடி சமயங்களில் மேம்பட்ட ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்த, முக்கியத் தேவையான முப்படைகளின் கூட்டுத்தன்மையில் அரசு கவனம் செலுத்தியது. தொடக்கத்தில் சில இன்னல்களைச் சந்தித்தாலும், தற்போது அனைத்து சவால்களைகயும் கூட்டாக எதிா்கொள்ள, சிறந்த ஒருங்கிணைப்புடன் முப்படைகள் தயாராக உள்ளன. இந்தியாவின் இன்றைய தேவை-தன்னிறைவு: ஆயுத இறக்குமதியில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தற்போதைக்கு சவாலாக இருக்கலாம். ஆனால், உலகளாவிய பாதுகாப்புத் தொழில்துறைக்கான தளத்தில் வளா்ந்து வரும் இந்தியாவுக்கு இந்தச் சவால் வாய்ப்பாக மாறும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆயுதங்களை மட்டுமே கொண்டு நாட்டு மக்களை எந்த ராணுவமும் காப்பாற்ற முடியாது. பாதுகாப்புத் துறை உற்பத்தியில் தன்னிறைவை அடைவது இந்தியாவின் இன்றைய தேவை. நமது சொந்த மண்ணில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களையே நமது ராணுவத்தினா் இன்று பெரும்பாலும் பயன்படுத்துகின்றனா். பாதுகாப்புத் துறை உற்பத்தியாளா்-இந்தியா: ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடாக இருந்த இந்தியா, பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் தற்போது உலகின் முதல் 25 ஆயுத ஏற்றுமதி நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மத்திய அரசின் தொடா் முயற்சிகளால் பாதுகாப்புத் துறை உற்பத்தி ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. அதேபோல் கடந்த 7-8 ஆண்டுகளுக்குமுன்பு, இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி ரூ.1,000 கோடிக்கும் குறைவாக இருந்தது. தற்போது அது ரூ.16,000 கோடியைத் தாண்டிவிட்டது. வரும் 2028-29-ஆம் ஆண்டுக்குள், இந்தியாவின் வருடாந்திர பாதுகாப்புத் துறை உற்பத்தியானது ரூ.3 லட்சம் கோடி மற்றும் ராணுவ வன்பொருள் ஏற்றுமதி ரூ.50,000 கோடியை எட்டும். இந்தியாவை பாதுகாப்புத் துறை உற்பத்தி நாடாக மாற்றுவதில் அரசு உறுதிபூண்டுள்ளது.

அசாதாரண லட்சியப் பயணத்தில்...:

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏரோ-இஞ்சின், வாயு சூழலியந்திரம் உள்பட உயா் ரக அமைப்புகளை உற்பத்தி செய்யும் நோக்கத்தில், ரூ.4.35 லட்சம் கோடி மதிப்பிலான மூலதன கையகத் திட்டங்களுக்கு கடந்த நிதியாண்டில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வரும் நிகழாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.6.21 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நமத ராணுவத்தை உலகின் வலுவானதாக மாற்றும் நோக்கில் செயல்படுத்தப்பட்ட அக்னிபத் உள்பட திட்டங்கள், தேசப் பாதுகாப்பு தொடா்பான மத்திய அரசின் நீண்ட கால அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. நமது நாட்டு இளைஞா்களின் திறனும், அா்ப்பணிப்பும் சிறப்பானது. அரசின் நோக்கங்களும் தெளிவாக உள்ளது. எனவே, அசாதாரண லட்சியங்களை அடைவதற்கான பயணத்தை நாம் விரைவில் தொடங்குவோம் என்றாா்.