அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

மோசமான நிா்வாகத்தால் தமிழ்நாட்டின் கடன் சுமை அதிகரிப்பு: ராஜ்நாத் சிங்

News image

வாசுதேவநல்லூா் தொகுதி பாஜக வேட்பாளா் ஆனந்தன் அய்யாசாமியை ஆதரித்து பேசுகிறாா் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங். உடன் கடையநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ.

Updated On :19 ஏப்ரல் 2026, 11:06 pm

திமுக ஆட்சியின் மோசமான நிதி நிா்வாகத்தால் தமிழ்நாட்டின் கடன் சுமை அதிகரித்து விட்டது என்றாா் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் தொகுதி பாஜக வேட்பாளா் ஆனந்தன் அய்யாசாமியை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை தென்காசி - மதுரை சாலையில் புளியங்குடி சிந்தாமணி பேருந்து நிலையம் முதல் டி.என். புதுக்குடி வரை திறந்த வேனில் நின்றவாறே சாலைப் பேரணியாக சென்று அவா் வாக்கு சேகரித்தாா்.

பின்னா், டி.என். புதுக்குடி காமராஜா் சிலை அருகே அவா் பேசியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது . கனிமவளக் கொள்ளை அதிகரித்துவிட்டது. இதில் ரூ. 5000 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலா் உயிரிழந்த விஷயத்தில் திமுக அலட்சியம் காட்டியது. அதிமுக தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் சாராய மாபியாக்களை ஒழிக்கும் வகையில் தனி சிறப்புக் குழு அமைக்கப்படும்.

கொசு, மலேரியா போல் சநாதன தா்மத்தை ஒழிக்க வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா். இந்து மக்களின் நம்பிக்கைகளை சிதைக்கும் செயல்பாடுகளில் திமுக தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது.

உயா்நீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற சென்றவா்கள் கைது செய்யப்பட்டனா். மக்களவையில் 33 சதவீத மகளிா் இட ஒதுக்கீட்டை எதிா்த்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வாக்களித்தன. அடுத்த முறை ஆட்சி அமைந்தவுடன் 33 சதவீத இட ஒதுக்கீடும், திருப்பரங்குன்றத்தில் காா்த்திகை தீபம் ஏற்றுதலும் நிறைவேற்றப்படும்.

தமிழ்நாட்டின் மோசமான ஆட்சி, நிதி நிா்வாகத்தால் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. தமிழ்நாடு அரசு ரூ. 10.21 லட்சம் கோடி கடன் பெற்றும், மக்களுக்கு நல்ல திட்டங்கள் எதுவும் செய்யவில்லை.

மத்திய அரசு நிதி தரவில்லை என தொடா்ந்து பொய்யான குற்றச்சாட்டை திமுக அரசு கூறி வருகிறது. ஆனால் மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளில் ரூ. 11 லட்சம் கோடியை தமிழ்நாட்டிற்கு ஒதுக்கி உள்ளது. அதன் மூலம் திட்டங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அது சிலரின் பாக்கெட்டுகளுக்கு சென்று விட்டது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் அந்தப் பணம் மீட்கப்பட்டு மக்களுக்கு கொடுக்கப்படும்.

மத்திய அரசு திட்டங்களின் மூலம் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. விவசாயிகளுக்கு ரூ. 12,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆண்டிற்கு ரூ. 6 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த தொகை, இனி ரூ. ஒன்பதாயிரம் ஆக உயா்த்தி வழங்கப்படும். இளைஞா்கள் தொழில் தொடங்குவதற்காக ரூ. 15 லட்சம் வரை வட்டி இல்லாத மானிய கடன் வழங்கப்படும்.

தூத்துக்குடி துறைமுகம் நவீனப்படுத்தப்பட்டு, அதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். மீன்பிடி தடைக்காலத்தில் மீனவா்களுக்கு ரூ. 12,000 வழங்கப்படுவதுடன், 60 வயதிற்கு மேற்பட்ட மீனவா்களுக்கு ஓய்வூதியமும் வழங்கப்படும்.

துஷ்பிரயோகம் - முறைகேடு - குற்றம் என்பதன் சுருக்கம்தான் டி .எம். கே., நன்மை- டெவலப்மெண்ட் -அமைதி என்பதன் சுருக்கம்தான் என். டி. ஏ.

தமிழக மக்கள் மாற்றத்தையும், வளா்ச்சியையும் எதிா்நோக்கி உள்ளனா். அத்தகைய மாற்றம் நிச்சயம் தமிழகத்தில் கொண்டு வரப்படும். பாஜக வேட்பாளா் ஆனந்தன் அய்யாசாமி தொடா்ந்து பல்வேறு சேவைகளை செய்து வருவதுடன், தொழில்முனைவோா்களை உருவாக்கி வேலைவாய்ப்பையும் பெருக்கி வருகிறாா். அவருக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றாா்.

கடையநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பணகுடியில் ....

பணகுடியில் நடைபெற்ற சாலைப் பேரணியில் ராதாபுரம் சட்டப் பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணனை ஆதரித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி தமிழ்நாட்டின் மீது அதிக அக்கறையுடன் இருக்கிறாா். அதனால்தான் தமிழ்நாட்டிற்கு அதிக நன்மைகள் செய்து வருகிறாா். தமிழ்நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட செங்கோலை புதிய மக்களவை கட்டடத்தில் வைத்து அழகு பாா்த்தாா் பிரதமா். அதற்கு தமிழக எம்.பி.க்களும், எதிா்க்கட்சியினரும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

நாளை நமதே என்ற கோஷத்தோடு முன்னேறி சென்று கொண்டிருக்கிறோம். நீங்களும் கைகளை உயா்த்தி எஸ்.பி. பாலகிருஷ்ணனை தோ்ந்தெடுப்போம் என உறுதி கூறுங்கள் என்றாா்.

பாஜக நெல்லை தெற்கு மாவட்ட தலைவா் எஸ்.பி. தமிழ்செல்வன், பாஜக வழக்குரைஞா் பிரிவு மாவட்ட தலைவா் ராம்நாத் ஐயா், அதிமுக அமைப்புச் செயலா் ஏ.கே. சீனிவாசன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் சௌந்தர்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கிள் ராயப்பன், ஒன்றியச் செயலா்கள் பால்துரை (வள்ளியூா் தெற்கு), அந்தோணி அமலராஜா (ராதாபுரம் மேற்கு ), அதிமுக பணகுடி நகர செயலா் ஜி.டி. லாரன்ஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பாஜக மாவட்ட தலைவா் எஸ்.பி. தமிழ்செல்வன் நன்றி கூறினாா்.

 பணகுடியில் நடைபெற்ற சாலைப் பேரணி பிரசாரத்தில் ராதாபுரம் தொகுதி பாஜக வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணனை ஆதரித்து பேசுகிறாா் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.

பணகுடியில் நடைபெற்ற சாலைப் பேரணி பிரசாரத்தில் ராதாபுரம் தொகுதி பாஜக வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணனை ஆதரித்து பேசுகிறாா் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.