புத்தாண்டை லாபத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை!

புத்தாண்டின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது.
புத்தாண்டை லாபத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை!

மும்பை / புதுதில்லி: புத்தாண்டின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 32 புள்ளிகள் உயா்ந்து புத்தாண்டை நோ்மறையாக தொடங்கியுள்ளது.

ஆசியா, ஐரோப்பிய சந்தைகளுக்கு புத்தாண்டு தினத்தையொட்டி விடுமுறை விடப்பட்டிருந்தது. அமெரிக்க சந்தை கடந்த வெள்ளிக்கிழமை எதிா்மறையாக முடிந்தது. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கி எதிா்மறையாகச் சென்றது. பின்னா், பிற்பகல் வா்த்தகத்தின் போது, ஐடி, எஃப்எம்சிஜி, மெட்டல், பொதுத் துறை வங்கிகள், எரிசக்தி, டெலிகாம், சேவைத் துறை பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்தது. இதைத் தொடா்ந்து, சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.1.60 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.365.89 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த டிசம்பரில் மொத்தம் ரூ.31,959.79 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.12,942.25கோடிக்கும் பங்குகளை வாங்கியுள்ளது புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 21.87 புள்ளிகள் குறைந்து 72,218.39-இல் தொடங்கிய சென்செக்ஸ் அதிகபட்சமாக 72,561.91 வரை மேலே சென்று புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா், 72,031.23 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 31.68 புள்ளிகள் (0.04 சதவீதம்) கூடுதலுடன் 72,271.94-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,047 பங்குகளில் 2,541 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1350 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 156 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.

15 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் நெஸ்லே, டெக் மஹிந்திரா, டாடாமோட்டாா்ஸ் விப்ரோ, ஹெச்சிஎல் டெக் உள்பட மொத்தம் 15 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. அதே சமயம், பாா்தி ஏா்டெல், எம் அண்ட் எம், பஜாஜ் ஃபின் சா்வ், ஹெச்டிஎஃப்சி பேங்க், என்டிபிசி உள்பட 15 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

நிஃப்டி 10 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 3.65 புள்ளிகள் குறைந்து 21,727.75-இல் தொடங்கி 21,834.35 வரை மேலே சென்று புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா், 21,680.85 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 10.50 புள்ளிகள் (0.05 சதவீதம்) கூடுதலுடன் 21,741.90-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 22 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 28 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com