ராகுல் காந்தி தொடங்கியுள்ள பாரத் ஜோடோ நியாய யாத்ரா தேச ஒற்றுமைக்கானது என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த தலைவர் கே.சி.தியாகி தெரிவித்துள்ளார்.
திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த தலைவர் கே.சி.தியாகி, “மணிப்பூர் மாநிலம் அமைதியின்றி உள்ளது. ஆனால் தில்லியில் உள்ள மத்திய அரசு இந்த விவகாரத்தில் மௌனம் காக்கிறது. மணிப்பூரில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துவக்கியுள்ள நடைப்பயணம் அம்மாநில மக்களுக்கு பயனளிக்கக் கூடியது.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையை எங்களது ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரிக்கிறது. மத்திய அரசின் தவறான கொள்கைகளாலேயே குகி மற்றும் மெய்தி இன மக்களுக்கிடையேயான வன்முறை மூண்டது என்ற ராகுல் காந்தியின் கருத்து மிகவும் சரியானது.
அவரின் இந்த நடைப்பயணம் தேச ஒற்றுமைக்கானது. இதனை விமர்சிக்கும் பாஜக தலைவர்களின் கருத்துகள் கண்டனத்திற்குரியவை.” என்று தெரிவித்தார்.
முன்னதாக, மணிப்பூரில் உள்ள தெளபல் மாவட்ட மைதானத்தில் இருந்து தனது 2கட்ட நடைப்பயணத்தை ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தொடங்கினார். தொடக்க நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் அக்கட்சியின் முன்னணித் தலைவா்கள் பங்கேற்றனர்.
இதையும் படிக்க | மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி: மாயாவதி அறிவிப்பு!
அதில் பேசிய ராகுல் காந்தி, “சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரம் என்று அனைத்து துறைகளிலும் இந்தியா மிகப்பெரிய அநீதியின் காலக்கட்டத்தில் இருக்கிறது. அதற்கெதிராகவே இந்த நடைப்பயணம் தொடங்கப்பட்டுள்ளது.” என்று பேசினார்.