மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி காங்கிரஸ் மனு: ஜன.22ல் உச்ச நீதிமன்றம் விசாரணை!

மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அமல்படுத்தக் கோரி காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்குர் தாக்கல் செய்த மனுவை ஜன.22ல் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அமல்படுத்தக் கோரி, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயா தாக்குர் தாக்கல் செய்த மனுவை ஜன.22ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2024 மக்களவைப் பொதுத் தேர்தலுக்கு முன்பாக, மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நாரிசக்தி வந்தன் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்குர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவின் மீது இன்று நடந்த விசாரணையின் போது, ​​மத்திய அரசின் சார்பில் எந்த வழக்கறிஞரும் ஆஜராகவில்லை என்பதால் இந்த வழக்கின் விசாரணையை ஜன.22-ம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

ஜெயா தாக்குர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான விகாஸ் சிங், “இந்த விவகாரம் விரைந்து விசாரிக்க வேண்டியது. இந்த சட்டம் அமலுக்கு வருமானால், வரக்கூடிய தேர்தலில் ஏராளமான பெண்கள் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்.” என்று கூறினார்.

அதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, “எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. மத்திய அரசின் தரப்பில் வாதிடுவதற்கு இங்கு யாரும் இல்லை. எனவே அவர்களின் தரப்பு வரட்டும். அடுத்த திங்கள்கிழமை (ஜன.22) இந்த வழக்கின் விசாரணையை நடத்துவோம்.” என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

2023 செப்டம்பர் 29ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com