இளைஞர்களுக்கு மீண்டும் துரோகம் செய்த மோடி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ரயில்வேயில் லட்சக்கணக்கில் காலிப் பணியிடங்கள் இருந்தும்கூட, வெறும் ஐயாயிரம் இடங்களுக்கே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
ராகுல் காந்தி (கோப்புப்படம்)
ராகுல் காந்தி (கோப்புப்படம்)

ரயில்வேயில் லட்சக்கணக்கில் காலிப் பணியிடங்கள் இருந்தும்கூட, வெறும் ஐயாயிரம் இடங்களுக்கே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

சமீபத்தில் வெளியான ரயில்வே துறை வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இவ்வாறு கூறியுள்ளார்.

அப்பதிவில் ராகுல் காந்தி கூறியுள்ளதாவது, “இந்தியாவில் உள்ள மூன்றில் ஒரு இளைஞர் வேலையின்மை பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இருப்பினும் பிரதமர் மோடி மீண்டும் ஒருமுறை இந்திய இளைஞர்களுக்கு துரோகமிழைத்துள்ளார். 

பிரதமர் மோடி இந்தமுறை, பெரிய கனவுகளை சுமந்துகொண்டு சிறிய வாடகை அறைகளில் தங்கியிருந்து, சுமார் 18 மணி நேரம் உழைத்து வரும் ஏழை இளைஞர்களை ஏமாற்றியுள்ளார். 

ரயில்வே துறையில் லட்சக்கணக்கில் காலிப் பணியிடங்கள் இருக்கும் நிலையில் வெறும் 5696 பணியிடங்களுக்கு மட்டுமே அறிவிப்பு வெளியிட்டு, 5 ஆண்டுகளாக காத்திருந்த போட்டித் தேர்வு மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. யார் பலனடைவதற்காக இவ்வாறு ரயில்வே பணியிடங்கள் குறைக்கப்படுகின்றன? 

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற மோடியின் வாக்குறுதி என்ன ஆனது? ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படாது என்ற உறுதிமொழி எங்கே போனது? 

ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. மோடியின் நடவடிக்கைகள் இளைஞர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகும். இந்திய இளைஞர்களின் உரிமைகளுக்காகவும், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும் நாம் உரத்து குரல் கொடுத்தாக வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com