ராமாயணத்தில் நடிக்கும்போது மாரடைப்பு! ராமர் பாதத்தில் அனுமன் வேடமிட்டவர் மரணம்!!

அயோத்தி ராமர் கோயில் திறப்பையொட்டி நடைபெற்ற ராமாயண நாடகத்தில், அனுமன் வேடத்தில் நடித்துக்கொண்டிருந்த மேடை நாடகக் கலைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
மாரடைப்பால் மயங்கி விழும் அனுமன் வேடமிட்டவர்
மாரடைப்பால் மயங்கி விழும் அனுமன் வேடமிட்டவர்


அயோத்தி ராமர் கோயில் திறப்பையொட்டி நடைபெற்ற ராமாயண நாடகத்தில், அனுமன் வேடத்தில் நடித்துக்கொண்டிருந்த மேடை நாடகக் கலைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ராமாயண நாடகத்தின் இறுதியாக ராமருக்கு முடிசூட்டும் காட்சி மேடையில் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருந்தபோது, அவரிடம் ஆசிபெறுவதைப்போன்று அனுமன் வேடமிட்டவர் மண்டியிட்டார். அப்போது ராமர் பாதத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். 

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா வெகு விமர்சையாக நேற்று (ஜன.22) நடைபெற்றது. இதனையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறப்புப் பூஜைகள், அன்னதானம், சிறப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

பல கோயில்களில் ராமாயணம் சொற்பொழிவாகவும் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டது. அந்தவகையில் ஹரியாணா மாநிலம் ஜவஹர் சௌக் பகுதியில் உள்ள ராமர் கோயிலில் ராமாயணம் மேடை நாடகமாக அரங்கேற்றப்பட்டது. அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை நிகழ்வையொட்டி நடைபெற்ற இந்த சிறப்பு நாடகத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர். 

நாடகத்தின் ஒரு பகுதியாக  ராமர் முடி சூட்டு விழா பாடல் ஒன்று மேடையில் பாடப்பட்டது. இந்தப் பாடலின் முடிவில் அனுமனாக நடித்த ஹரிஷ், ராமரின் பாதத்தில் அமர்ந்து ஆசி பெற வேண்டும். அதன்படி பாடல் பாடும்போது ராமரிடம் வந்து அமர்ந்த ஹரிஷ், திடீரென சரிந்து ராமராக நடித்தவரின் பாதத்தில் விழுந்தார். 

ஆசி பெற விழுந்தவர் எழுவார் என பலர் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், ஹரிஷ் அசையாததால் சக நடிகர்கள் அவரின் அருகே சென்று அவரைத் தூக்கினர். 

உடனடியாக அங்கிருந்தவர்கள் ஹரீஷை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். எனினும், அவர் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் ராம பக்தர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான விடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com