
சுதந்திரப் போராட்டத் தியாகி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்து அளித்த வாக்குறுதியை ஆட்சிக்கு வந்ததும் பாஜக மறந்துவிட்டது என்று மம்தா பானர்ஜி கூறினார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127வது பிறந்த தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி இவ்வாறு தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் மம்தா பானர்ஜி பேசியதாவது, “நாட்டில் இப்போதெல்லாம் அரசியலுக்காகதான் பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது. நம் நாட்டிற்காக போராடி உயிரைவிட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பிறந்த தினத்திலோ, மறைந்த தினத்திற்கோ பொதுவிடுமுறை விடப்படுவதில்லை.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் கூட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் மறைந்த நாள் குறித்து அறியாதது வருத்தத்திற்குரியது. அவருக்கு என்ன நடந்தது என்பது கூட நமக்குத் தெரியாமல் இருப்பது வெட்கக்கேடு.
மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் நேதாஜியின் மறைவு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தபின்பு நேதாஜியையே மறந்துவிட்டது.
இதையும் படிக்க | நேதாஜியே தேசத் தந்தை: ஆளுநர் ஆர்.என். ரவி
கடந்த 20 ஆண்டுகளாக நேதாஜியின் பிறந்த தினத்தை தேசிய விடுமுறையாக அறிவிப்பதற்காக முயற்சித்து வருகிறேன். ஆனால் அந்த முயற்சி இன்னும் வெற்றி பெறவில்லை.” என்று தெரிவித்தார்.