மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி அமைக்காது என்று பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் சிங் தெரிவித்துள்ளார்.
பகவந்த் மான் (கோப்புப்படம்)
பகவந்த் மான் (கோப்புப்படம்)

மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி அமைக்காது என்று பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் மேற்குவங்கத்தில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ள நிலையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் இவ்வாறு கூறியுள்ளார்.

புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பகவந்த் மான், “பஞ்சாப் மாநிலத்தில் வரவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி சேராது. 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சியே வெற்றி பெறும்” என்று கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் அங்கம் வகித்து வருகின்றன. 

தில்லி, பஞ்சாப், ஹரியாணா, கோவா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு குறித்து ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் வேளையில் பஞ்சாப் முதல்வர் இதனைத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பகவந்த் சிங் மான், "நாட்டின் கதாநாயகனாக பஞ்சாப் மாறும். 2024 மக்களவைத் தேர்தலில் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி 13-0 என்ற கணக்கில் வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸுடன் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ளாதா என்று கேள்வி எழுப்பியபோது, ​​"நாங்கள் அவர்களுடன் (காங்கிரஸ்) செல்லவில்லை.  பஞ்சாபில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளுக்கான ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் குறித்து ஏற்கனவே விவாதங்கள் நடைபெற்று வருகிறது. ஒரு மக்களவைத் தொகுதிக்கு மூன்று முதல் நான்கு வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்.” என்று தெரிவித்தார்.

இருப்பினும், சண்டிகர் மேயர் தேர்தலுக்காக ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ளது. மேலும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com