
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தால் காங்கிரஸுக்கு எந்தப் பலனும் கிடைக்காது என்று ராம்தாஸ் அதவாலே விமர்சித்தார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூரில் இருந்து இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அவரது நடைப்பயணம் குறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே இவ்வாறு கூறினார்.
ராம்தாஸ் அதவாலே பேசியதாவது, “ராகுல் காந்தி நடத்துவது நியாய யாத்திரை அல்ல, அநியாய யாத்திரை. இந்தியாவை அவர் ஒற்றுமையாக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்தியா ஏற்கனவே ஒற்றுமையாகதான் உள்ளது.
இந்தியா முன்பு பிரிக்கப்பட்டிருந்தது. ஆனால் அம்பேத்கரின் அரசியலமைப்பு இந்தியாவை பிரிக்கவே முடியாத அளவுக்கு ஒன்றிணைத்துள்ளது.
ராகுல் காந்தி நாட்டைப் பற்றி கவலைப்பட வேண்டிய தேவையே இல்லை. ஏனெனில் பிரதமர் மோடி மற்றும் நாங்கள் எல்லாம் இருக்கிறோம். நாங்கள் நாட்டைப் பார்த்துக் கொள்வோம்.
காங்கிரஸ் இத்தனை ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது இந்தியாவை ஒற்றுமையாக்குவதற்கான இதுபோன்ற முயற்சிகளை எடுக்கவில்லை. இப்போது ஒன்றிணைப்பதாக சொல்லிக் கொள்கின்றனர்.
இந்த நடைப்பயணம் ஒரு நாடகம் மட்டுமே. இந்த நடைப்பயணத்தால் காங்கிரஸுக்கு எந்தப் பலனும் கிடைக்காது.” என்று பேசினார்.