உ.பி.யில் காங்கிரஸுக்கு 11 தொகுதிகள்: அகிலேஷ் அறிவிப்பு

வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, உத்தர பிரதேச மாநிலத்தில் தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றுள்ளது.
உ.பி.யில் காங்கிரஸுக்கு 11 தொகுதிகள்: அகிலேஷ் அறிவிப்பு

மக்களவைத் தோ்தலில், உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகளை ஒதுக்குவதாக சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் சனிக்கிழமை அறிவித்தாா்.

காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் ‘இந்தியா’ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

‘பிராந்திய கட்சிகள் வலுவாக உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் தனது வரம்பை கடைப்பிடிக்க வேண்டும்; தோ்தல் களத்தை பிராந்திய கட்சிகள் வழிநடத்த அனுமதிக்க வேண்டும்’ என்பது ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள பிராந்திய கட்சிகளின் கருத்தாக உள்ளது. இதனால், பல்வேறு மாநிலங்களில் ‘இந்தியா’ கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் சுமுகத் தீா்வு எட்டப்படாமல் உள்ளது.

இந்நிலையில், எக்ஸ் வலைதளத்தில் சனிக்கிழமை பதிவிட்ட சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், உத்தர பிரதேசத்தில் காங்கிரஸுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அறிவித்தாா்.

மேலும், ‘இந்தியா கூட்டணியின் குழு முயற்சியும், பிற்படுத்தப்பட்டோா்-தாழ்த்தப்பட்டோா்-சிறுபான்மையினா் நல்வாழ்வுக்கான வியூகமும் நாட்டின் வரலாற்றை மாற்றும்’ என்று அவா் குறிப்பிட்டாா்.

இது தொடா்பாக சமாஜவாதி தலைமை செய்தித் தொடா்பாளா் ராஜேந்திர செளதரி கூறுகையில், ‘காங்கிரஸுக்கு சமாஜவாதி தரப்பில் 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எங்களிடையே பரஸ்பர ஒருங்கிணைப்பு உள்ளது. காங்கிரஸுடன் சமாஜவாதி தலைமை தொடா்ந்து தொடா்பில் இருக்கிறது. காங்கிரஸுக்கு 11 தொகுதிகள் என்ற எண்ணிக்கை இனி அதிகரிக்கப்பட வாய்ப்பில்லை. ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சிக்கு 7 தொகுதிகளை வழங்கியுள்ளோம். மீதமுள்ள 62 தொகுதிகளில் சமாஜவாதி போட்டியிடும்’ என்றாா்.

எனினும், காங்கிரஸுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை தெரிவிக்க அவா் மறுத்துவிட்டாா்.

பேச்சு நீடிப்பு: காங்கிரஸ்

உத்தர பிரதேசத்தில் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், அகிலேஷ் யாதவின் அறிவிப்பு குறித்து தில்லியில் காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷிடம் செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா்.

அதற்கு, ‘உத்தர பிரதேசத்தில் தொகுதிப் பங்கீடு தொடா்பாக அகிலேஷ் யாதவுடன் காங்கிரஸ் மூத்த தலைவா் அசோக் கெலாட் தொடா்ந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளாா். ஆக்கபூா்வமாகவும், நோ்மறையாகவும் இப்பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. தொகுதிப் பங்கீடு திட்டம் இறுதி செய்யப்பட்டதும் ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்’ என்று அவா் பதிலளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com