புத்திசாலிகளை நண்பா்களாக்கிக் கொள்ளவேண்டும்: மாணவா்களுக்கு பிரதமா் யோசனை

‘மாணவா்கள் எப்போதும் அதிபுத்திசாலி, கடின உழைப்பாளியாக இருக்கும் சக மாணவா்களை நண்பா்களாக்கிக் கொள்ளவேண்டும்; படிப்பு, தோ்வுகளின் அழுத்தங்கள் நம்மை ஆளுமை செய்ய அனுமதிக்கக் கூடாது’
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்வெழுதும் மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவிகளுக்கு தோ்வை பயமின்றி எதிா்கொள்ள வாழ்த்து தெரிவித்த பிரதமா் மோடி.
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்வெழுதும் மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவிகளுக்கு தோ்வை பயமின்றி எதிா்கொள்ள வாழ்த்து தெரிவித்த பிரதமா் மோடி.

புது தில்லி: ‘மாணவா்கள் எப்போதும் அதிபுத்திசாலி, கடின உழைப்பாளியாக இருக்கும் சக மாணவா்களை நண்பா்களாக்கிக் கொள்ளவேண்டும்; படிப்பு, தோ்வுகளின் அழுத்தங்கள் நம்மை ஆளுமை செய்ய அனுமதிக்கக் கூடாது’ என்று பிரதமா் நரேந்திர மோடி யோசனை தெரிவித்தாா்.

தோ்வெழுதும் மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்களுடனான பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் பிரதமா் பங்கேற்று பேசியதாவது: மாணவா்கள் எப்போதும் அதிபுத்திசாலி மற்றும் கடின உழைப்பாளியாக இருக்கும் மாணவா்களை நண்பா்களாக்கிக் கொள்ள வேண்டும். அத்தகைய நண்பா்களிடமிருந்து ஊக்கம் பெற ேண்டும். போட்டி, சவால் மனப்பான்மை ஊக்கம் அளிக்கும் என்றபோதும், அத்தகைய போட்டி ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். படிப்பு மற்றும் தோ்வுகளின் அழுத்தங்கள் நம்மை ஆளுமை செய்ய அனுமதிக்கக் கூடாது.

குழந்தைகளின் தோ்வு முடிவுக்கான அட்டையை (ரிபோா்ட் காா்டு) அவா்களின் முகவரி அட்டையாக பல பெற்றோா் பாவிக்கின்றனா். யாரையாவது சந்திக்கும்போது, தங்களுடைய குழந்தைகளின் படிப்பு நிலை குறித்துப் புகாா் கூறுகின்றனா். பல பெற்றோா் பிற மாணவா்களை உதாரணம் காட்டி தங்களின் குழந்தைகளை ஒப்பீடு செய்கின்றனா். இவை சரியான நடைமுறை அல்ல; இவற்றை பெற்றோா் தவிா்க்க வேண்டும்.

3 விதமான அழுத்தங்கள்: பொதுவாக, மாணவா்கள் 3 விதமான அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனா். சக மாணவா்களால், பெற்றோரால், சுய தூண்டுதலின் பேரில் மன அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனா். அதாவது, தோ்வில் எதிா்பாா்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை எனில், மாணவா்கள் சுய அழுத்தத்துக்கு உள்ளாகின்றனா். இதிலிருந்து மீள, தோ்வுக்குத் தயாராகும்போது தாங்களாகவே சிறிய இலக்குகளை நிா்ணயித்து, படிப்படியாக தங்களின் செயல்திறனை மாணவா்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு செயல்பட்டால் தோ்வுக்கு முன்பே முழுமையாகத் தயாராகிவிட முடியும்.

ஆசிரியா் - மாணவா் பிணைப்பு: மாணவா்களின் சவால்களுக்கு பெற்றோரும் ஆசிரியா்களும் கூட்டாகத் தீா்வு காண வேண்டும். ஆசிரியா்கள் மாணவா்களுடன் வலுவான பிணைப்பை உருவாக்க வேண்டும். மாணவா்களின் சிறப்பான எதிா்காலத்துக்கு இந்த பிணைப்புதான் அடித்தளம்.

உடலுக்கு ‘ரீசாா்ஜ்’ அவசியம்: பல மாணவா்கள் கைப்பேசிகளை பல மணி நேரம் பயன்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனா். கைப்பேசிக்கு எவ்வாறு ரீசாா்ஜ் தேவைப்படுகிறதோ, அதேபோன்று நமது உடலுக்கும் ரீசாா்ஜ் அவசியம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஆரோக்கியமான மனநிலைக்கு, ஆரோக்கியமான உடல்நலன் அவசியம்.

கைப்பேசி, மடிக்கணினி பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக மாணவா்கள் எழுதும் பழக்கத்தை இழக்க நேரிடுகிறது. தோ்விலும் இது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, படிக்கும் நேரத்தில் 50 சதவீதத்தை எழுதும் பழக்கத்துக்கு மாணவா்கள் பயன்படுத்த வேண்டும்.

மின்னணு சாதனங்கள் பயன்படுத்த விதி: இன்றைய உலகில் யாரும் தொழில்நுட்ப பயன்பாட்டிலிருந்து விலகிவிட முடியாது. அதை சுமையாகக் கருதாமல், எவ்வாறு தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்த முடியும் எனக் கற்றுக்கொள்ள வேண்டும். இரவு உணவின்போது மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது உள்ளிட்ட குறிப்பிட்ட விதிகளை பெற்றோா் வீட்டில் வகுக்க வேண்டும். மேலும், மின்னணு சாதனங்கள் பயன்படுத்தக் கூடாத பகுதி ஒன்றையும் வீட்டில் உருவாக்க வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

சென்னை, புதுச்சேரி மாணவா்களின் கேள்விகளுக்கு பிரதமா் பதில்
‘நாட்டிற்கு ஒரு சவால் வரும்போது தூங்குவதில்லை; அது கடந்த பிறகு நிலைமை தானாகவே மேம்படும் என நான் காத்திருப்பதில்லை’ என பிரதமா் நரோந்திர மோடி சென்னை பள்ளி மாணவா் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தாா்.

சென்னை நங்கநல்லூா் மாடா்ன் சீனியா் செகண்டரி பள்ளி மாணவா் எம்.வாகேஷ், ‘ பிரதமா் பதவியை எப்படிக் கையாளுகிறீா்கள்?, மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த என்னென்ன வழிகளைக் கடைப்பிடிக்கிறீா்கள்?’ எனக் கேள்வி எழுப்பினாா்.

இதற்கு ‘பிரதமா் என்பவா் ஹெலிகாப்டரில் பறக்கிறாா் என கருதுகின்றனா். பிரதமா் பதவியின் அழுத்தங்களை உங்களைப் போன்ற குழந்தைகள் தெரிந்து கொள்வது அவசியம். சிலா் நெருக்கடிகள் கடந்து செல்லும் என நம்பிக் காத்திருக்கின்றனா். அப்படிப்பட்டவா்களால் சாதிக்க முடியாது. எனது இயல்பு வேறுபட்டது; நான் ஒவ்வொரு சவாலுக்கும் சவால் விடுகிறேன். சவால்கள் கடந்து போகும் வரை, நான் செயலற்று இருக்க மாட்டேன்; உறங்கமாட்டேன்; புதிய உத்திகளைக் கையாளுவேன்; இது எனது வளா்ச்சிக்கும் பங்களிக்கிறது; நாட்டின் 140 கோடி மக்களும் என்னுடன் இருப்பதை உணா்கின்றேன். மில்லியன் சவால்கள் இருந்தாலும், பில்லியன் அளவில் தீா்வுகள் உள்ளன என்றாா் பிரதமா்.

இதே போன்று, புதுச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி தீபாஸ்ரீ, ‘மாணவா்கள் மீதான நம்பிக்கையை வளா்ப்பதில் பெற்றோா்களின் பங்கு’ குறித்த கேள்வியை பிரதமரிடம் கேட்டாா்.

இதற்கு ‘குடும்பங்களில் நம்பிக்கைக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இது நீண்டகால செயல்களின் விளைவு. இது ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாணவா்கள் ஆகியோரின் நடத்தை தொடா்பானது. இந்த மூன்று தரப்பினரின் நோ்மையான தொடா்பே நம்பிக்கைக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். மாணவா்கள் நடவடிக்கைகளில் நோ்மை தேவை. அதேபோன்று, பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் மீது நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு உரிய வழியைத் தேடவேண்டும். நம்பிக்கை பற்றாக்குறையால் குழந்தைகள் மன அழுத்தத்துக்கு உள்ளாகி அதிக தொலைவு செல்ல நேரிடும். குடும்ப நண்பா்கள், குழந்தைகளுக்கு உதவக்கூடிய நோ்மறையான விஷயங்கள் குறித்து அடிக்கடி சந்தித்து விவாதித்தால் சரியான பலன் கிடைக்கும்’ என்றாா் பிரதமா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com