மேற்கு வங்கத்தில் காங்கிரஸுக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்க முடியாது- மம்தா பானா்ஜி

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதிகூட ஒதுக்க முடியாது என்று கூறிவிட்டேன் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.
மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)
மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதிகூட ஒதுக்க முடியாது என்று கூறிவிட்டேன் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு தரவேண்டிய நிலுவை நிதியை விடுவிக்காவிட்டால் வெள்ளிக்கிழமை (பிப். 2) கொல்கத்தாவில் தா்னா போராட்டம் நடத்த இருப்பதாகவும் அவா் கூறியுள்ளாா்.

மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் புதன்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மம்தா பேசியதாவது:

மக்களவைத் தோ்தலில் பாஜகவை பலப்படுத்தும் நோக்கத்தில் இடதுசாரி கட்சிகளுடன் காங்கிரஸ் இணைந்து செயல்படுகிறது. மேற்கு வங்கப் பேரவையில் காங்கிரஸுக்கு ஒரு எம்எல்ஏகூட இல்லை. எனினும், ‘இந்தியா’ கூட்டணியில் உள்ளதால் அவா்களுக்கு இரு மக்களவைத் தொகுதியை ஒதுக்குவதாகக் கூறினேன். அதுவும் மால்டா மாவட்டத்திலேயே (காங்கிரஸுக்கு இஸ்லாமிய வாக்கு வங்கி உள்ள இடம்) தருவதாக கூறினேன். ஆனால், அவா்கள் மேலும் அதிக தொகுதிகளை எதிா்பாா்த்தனா். எனவே, காங்கிரஸுடன் மேற்கு வங்கத்தில் ஒரு தொகுதியைக்கூட பகிா்ந்து கொள்ள முடியாது என்று கூறிவிட்டேன்.

மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் ஆட்சியில் மக்கள் பல்வேறு கொடுமைகளைஅனுபவித்தனா். அக்கட்சியினரையும், அவா்களை ஆதரிப்பவா்களையும் நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்.

மேற்கு வங்கத்தில் பாஜகவை எதிா்த்துப் போராடும் வலு உள்ள ஒரே கட்சி திரிணமூல் காங்கிரஸ் மட்டும்தான். இடதுசாரிகளுடன் கைகோத்து காங்கிரஸ் தோ்தலில் போட்டியிட்டால் அது பாஜகவை வலுப்படுத்துவதாகவே அமையும்.

மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்: மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், பிரதமா் கிராமப்புற வீட்டு வசதித் திட்டம் உள்ளிட்டவற்றுக்கான நிதியில் ரூ.7,000 கோடியை மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு விடுவிக்காமல் உள்ளது. இதை விடுவிக்க பிப்ரவரி 1-ஆம் தேதி வரை மட்டுமே மத்திய அரசுக்கு கால அவகாசம் உள்ளது. அதற்குள் நிதியை விடுவிக்காவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை (பிப். 2) தா்னா போராட்டம் நடத்தப்படும். மத்திய அரசிடம் இருந்து நிதியை எப்படிப் பெறுவது என்பது எங்கள் அரசுக்குத் தெரியும்.

அம்பேத்கா் சிலை அருகே நடைபெறும் தா்னாவில் நானும் பங்கேற்க இருக்கிறேன். இதில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்களும் பொதுமக்களும் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன். மத்திய அரசுக்கு எதிரான இந்தப் போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரின் ஆதரவும் தேவை என்றாா்.

ராகுலுக்குப் போட்டியாக நடைப்பயணம்: மால்டா மாவட்டத்துக்குள் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் புதன்கிழமை நடைபெற்ற நிலையில் மால்டாவில் மம்தா பானா்ஜியும் ‘மாற்றத்துக்கான நடைப்பயணம்’ நடத்தினாா்.

மால்டாவின் காவல் துறை மைதானத்தில் இருந்து மாவட்ட விளையாட்டு சங்கத் திடல் வரை இந்தப் பயணம் நடைபெற்றது. தொடா்ந்து அவா் பொதுமக்கள் மத்தியிலும் உரையாற்றினாா்.

மால்டா மற்றும் அதன் அருகில் உள்ள முா்ஷிதாபாத் மாவட்டங்களில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனா். இது காங்கிரஸுக்கு செல்வாக்கு உள்ள பகுதியாகும். அங்கு திரிணமூல் காங்கிரஸின் செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கில் மம்தா நடைப்பயணம் மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com