புதிய குற்றவியல் சட்டங்களில் அரசியலமைப்புக்கு எதிரான மாற்றங்கள்: ப. சிதம்பரம்

90 முதல் 99 சதவிகிதம் பழைய சட்டத்தில் இருந்து வெட்டி, நகலெடுக்கப்பட்டு ஒட்டப்பட்டவை.
ப. சிதம்பரம்  (கோப்புப் படம்)
ப. சிதம்பரம் (கோப்புப் படம்)

புதிதாக அமலுக்கு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த சட்டங்களில் பிற்போக்குத்தன்மையும், அரசியலமைப்பு எதிரான சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

ஆங்கிலேயா் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்துள்ளன.

ப. சிதம்பரம்  (கோப்புப் படம்)
புதிய குற்றவியல் சட்டங்களின் சிறப்பம்சங்கள்!

இந்த நிலையில், மூன்று சட்டங்கள் குறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“ஐபிசி, சிஆா்பிசி, இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக புதிய சட்டங்கள் இன்று அமலுக்கு வந்துள்ளன. புதிய சட்டங்கள் என்றழைக்கப்படுவதில் 90 முதல் 99 சதவிகிதம் பழைய சட்டத்தில் இருந்து வெட்டி, நகலெடுக்கப்பட்டு ஒட்டப்பட்டவை.

புதிய சட்டங்களில் கொண்டுவரப்பட்டுள்ள சில திருத்தங்கள் வரவேற்கதக்கவைதான். ஆனால், அதனை சட்டத் திருத்த மசோதாக்களாக கொண்டு வந்திருக்கலாம்.

மேலும், புதிய சட்டத்தில் பல பிற்போக்கு விதிகள் உள்ளன. சில மாற்றங்கள் அரசியலமைப்புக்கு எதிராக உள்ளன. நிலைக்குழுவில் உள்ள எம்பிக்கள் விதிகளில் உள்ள தங்களின் மாற்று கருத்துகளை விரிவாக எழுதியுள்ளனர். ஆனால், எம்பிக்களின் கருத்துகளுக்கு அரசுத் தரப்பில் எந்தவொரு மறுப்பும், பதிலும் அளிக்கவில்லை. நாடாளுமன்றத்திலும் பயனுள்ள விவாதங்கள் நடத்தப்படவில்லை.

சட்ட அறிஞர்கள், நீதிபதிகள், பார் கவுன்சில்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் மூன்று சட்டங்களில் உள்ள கடுமையான குறைபாடுகளை சுட்டிக்காட்டி பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர். ஆனால், அவர்களின் கேள்விகளுக்கு அரசுத் தரப்பில் யாரும் பதிலளிக்க அக்கறை காட்டவில்லை.

குற்றவியல் நீதி நிர்வாகத்தில் குழப்பங்களை ஏற்படுத்தி தாக்கத்தை உண்டாக்கும். பல்வேறு நீதிமன்றங்களில் புதிய சட்டங்கள் சவால்களை ஏற்படுத்தும். அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் நீதித்துறையின் நவீன கோட்பாடுகளுக்கு இணங்க மூன்று குற்றவியல் சட்டங்களிலும் மேலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com