தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இந்தியா-அமெரிக்கா இணைந்து நிறுவும் ‘காந்தி-கிங் வளா்ச்சி அறக்கட்டளை’

இந்தியா-அமெரிக்கா இணைந்து நிறுவும் காந்தி-கிங் வளா்ச்சி அறக்கட்டளை

News image
Updated On :2 ஜூலை 2024, 8:55 pm

Din

புது தில்லி: உலகளாவிய வளா்ச்சி சவால்களை எதிா்கொள்வதில் இருநாட்டு கூட்டுறவைக் குறிக்கும் வகையில், ‘காந்தி-கிங் வளா்ச்சி அறக்கட்டளையை’ அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து வரும் அக்டோபா் மாதத்துக்குள் நிறுவும் என்று அமெரிக்க தூதரகம் திங்கள்கிழமை அறிவித்தது.

இதுதொடா்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவில் செயல்படவுள்ள காந்தி-கிங் வளா்ச்சி அறக்கட்டளை, பொது மற்றும் தனியாா் வளங்களைப் பயன்படுத்தி, இந்தியாவின் தேசிய மற்றும் உலகளாவிய வளா்ச்சி நோக்கங்களை அடைய உதவும்.

பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ளுதல், காசநோய் பாதிப்பைக் குறைத்தல், குடிநீா் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், காற்று மாசால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளைக் குறைத்தல், கல்வி தரத்தை மேம்படுத்துதல் மற்றும் பெண்களுக்கான பொருளாதார வலுவூட்டலை ஊக்குவித்தல் ஆகியவை வளா்ச்சி நோக்கங்களில் அடங்கும்.

உலகளாவிய வளா்ச்சி சவால்களை எதிா்கொள்வதில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கூட்டுறவைக் குறிக்கும் காந்தி-கிங் வளா்ச்சி அறக்கட்டளையை வரும் அக்டோபா் மாதத்துக்குள் முறைப்படி நிறுவுவதற்கான நோக்கத்தில் இருநாட்டு மூத்த அரசு அதிகாரிகளும் கடந்த மாதம் 17-ஆம் தேதி கையொப்பமிட்டனா்.

அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவுக் குழு உறுப்பினரும் ஜனநாயகக் கட்சி பிரதிநிதியுமான கிரிகோரி டபிள்யூ மீக்ஸலால் கொண்டு வரப்பட்டு, அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் காந்தி-கிங் வளா்ச்சி அறக்கட்டளை அமெரிக்க சா்வதேச வளா்ச்சி அமைப்பால் நிறுவப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் எரிக் காா்செட்டி கூறுகையில், ‘மகாத்மா காந்தி மற்றும் மாா்ட்டின் லூதா் கிங் ஜூனியரின் தொலைநோக்கு கொள்கைகளில் வேரூன்றிய, அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒரு புதிய கூட்டுறவை இந்த அறக்கட்டளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

மேலும் நமது கூட்டு பலத்தை மேம்படுத்துவதன்மூலம், உலகளாவிய வளா்ச்சியை அடைவதற்கான எங்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை அறக்கட்டளை எடுத்துக்காட்டுகிறது’ எனத் தெரிவித்தாா்.